த லெஜண்ட் - விமர்சனம்

29 Jul 2022

சரவணா ஸ்டோர்ஸ் கடை விளம்பரத்தின் மூலம் டிவி பார்க்கும் இளைஞர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியவர் சரவணன். அவர் சினிமாவில் கதாநாயகாக அறிமுகமாகப் போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் பலரை ஆச்சரியப்படுத்தியது.

தன்னைப் பற்றிய விமர்சனங்களைப் புறந்தள்ளி படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து இன்று மக்கள் முன் கொண்டு வந்து வெளியிட்டிருக்கிறார். சினிமா என்றாலே விமர்சனங்கள் வரும். ஆனால், அந்த விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காமல் இன்று தன்னுடைய படத்தை வெளியிட்டிருப்பதே அவருக்கு பெரும் சாதனைதான்.

ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கீத்திகா, ஊர்வசி ரத்தேலா கதாநாயகிகளாக நடிக்க, சுமன் வில்லனாக நடித்திருக்கிறார். படத்தில் பிரபு, நாசர், ரோபோ சங்கர், யோகி பாபு, மறைந்த நடிகர் விவேக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

உலக அளவில் புகழ் பெற்ற விஞ்ஞானி சரவணன். தனது ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பி வந்து தன் மக்களின் நலனுக்காக வாழ நினைக்கிறார். அவரது பள்ளிக் கால நண்பன் ரோபோ சங்கர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு திடீரென இறந்து போகிறார். அவரது இறப்பு சரவணனுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறது. சர்க்கரை வியாதிக்கு எப்படியாவது மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆராய்ச்சியில் இறங்குகிறார். அவர் மருந்து கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் பிரபலமான ஒரு ஆக்ஷன் ஹீரோ என்னவெல்லாம் செய்வாரோ அவை அனைத்தையும் தனது முதல் படத்திலேயே செய்துள்ளார் சரவணன். பறந்து பறந்து அடிக்கிறார், நடன அழகிகளுடன் இணைந்து சளைக்காமல் நடனமாடுகிறார். ஊருக்காக பாடுபடுகிறார், எதிரிகளை துவம்சம் செய்கிறார். அவருக்காகவே இந்தப் படத்தையும் அவரது கதாபாத்திரத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள் இயக்குனர்கள்.

சரவணன் காதலியாக, மனைவியாக கீத்திகா முதல் பாதியில் வந்தாலும் கொஞ்சம் கிளாமர் நிறைய அழகுடன் ரசிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில் ஊர்வசி ரத்தேலா வருகிறார். நல்லவர் போல நடித்து சரவணனை ஏமாற்றுகிறார்.

தமிழ் சினிமாவின் வழக்கமான வில்லனாக இந்தப் படத்திலும் சுமன். பெரிய மருந்துக் கம்பெனியின் முதலாளி. சர்க்கரை வியாதிக்கு இன்சுலின் தயாரிக்கும் கம்பெனி அவர்களுடையது. அதனால்தான், அந்த வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கும் நாயகன் சரவணனை எதிர்க்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் பிரபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், விஜயகுமார், லதா, சச்சு, சிங்கம்புலி என பெரும் நட்சத்திரக் கூட்டமே நடித்திருக்கிறது.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ அவையனைத்துமே இந்தப் படத்தில் உண்டு. 

உலகம் சுற்றும் வாலிபன், சிவாஜி இரண்டையும் கலந்து உருவாக்கிய படம் போல உள்ளது. 

Tags: the legend, jd jerry, harris jayaraj, saravana, geethika, oorvasi rautela

Share via: