‘மேயாத மான், ஆடை’ படங்களை இயக்கியவரும், ‘மாஸ்டர், விக்ரம்’ படங்களுக்கு இணைந்து வசனம் எழுதியவருமான ரத்னகுமார் இயக்கியிருக்கும் படம் இது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சந்தானம், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஹரிஷ்குமார், கவி சுந்தரம், மௌரிஷ் தாஸ், யுவராஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

சந்தானம் படம் என்றாலே நகைச்சுவைப் படமாக மட்டுமே இருக்கும். இந்தப் படத்தில் ஒரு மாறுபட்ட சந்தானத்தைக் காட்டி, ஒரு பிளாக் காமெடி படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார். சந்தானம் சீரியசாக இருக்க, அவரைச் சுற்றி இருப்பவர்களே படத்தில் நகைச்சுவை செய்கிறார்கள்.

தன் அப்பா தன்னைக் கவனிக்க வேண்டும் என மதிமாறன் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டுகிறார். தன்னை கடத்தியது போல நாடகமாடினால் அப்பாவின் கவனத்தைத் திருப்பலாம் என முடிவு செய்கிறார்கள். ஆனால், மதிமாறனை உண்மையாகவே யாரோ கடத்தி விடுகிறார்கள். அதனால் மதிமாறனின் நண்பர்கள் கூகுள் என்கிறது குலு குலு-வான சந்தானத்திடம் சென்று உதவி கேட்கிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து மதிமாறனைத் தேட ஆரம்பிக்கிறார்கள். மதிமாறன் கிடைத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

இந்த மெயின் கதையுடன் இணைந்து வில்லனான பிரதீப் ராவத் அவருடைய சொத்துக்களைக் காப்பாற்ற தனது அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகளான அதுல்யாவைக் கொல்ல திட்டம் தீட்டுவது மற்றொரு கிளைக் கதையாக வருகிறது. இந்தக் கதை மெயின் கதையுடன் ஒரு கட்டத்தில் இணைகிறது.

படத்தின் ஆரம்பத்திலேயே இது வழக்கமான ஒரு படம் அல்ல என இயக்குனர் புரிய வைத்துவிடுகிறார். அமேசான் காடுகள் பக்கம் உள்ள ஒரு பழங்குடி இனத்தில் பிறந்து நாடு நாடாகச் சுற்றி சென்னையில் வந்து செட்டிலானவராக சந்தானம் நடித்திருக்கிறார். இதுவரையில் சந்தானம் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என தாராளமாகச் சொல்லலாம். பல மொழிகள் கற்றவர், அழிந்து போன தன் தாய் மொழி மீது அதிகப் பற்று கொண்டவர் என சந்தானம் கதாபாத்திரத்தை வைத்து நிகழ்கால அரசியலையும் பலமாகச் சாடியிருக்கிறார் இயக்குனர். 

ஹரிஷ்குமார், கவி சுந்தரம், மௌரிஷ் தாஸ், யுவராஜ் ஆகியோருடன் ஹரிஷ் காதலியான நமீதா கிருஷ்ணமூர்த்தியும் படம் முழுவதும் வருகிறார். பிரதீப் ராவத்தின் தங்கையாக அதுல்யா சந்திரா நடித்திருக்கிறார். இவர்கள் அனைவரின் நடிப்பும் யதார்த்தமாக உள்ளது.

வில்லனாக பிரதீப் ராவத், அவரது தம்பியாக பிபின், போலீசாக சாய் தீனா என இந்தக் கதாபாத்திரங்களும் சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளன.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் வழக்கம் போல வித்தியாசமாக அமைந்துள்ளன. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளன.

வித்தியாசமான முயற்சியாக எடுக்கப்படும் இம்மாதிரியான படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்.