அந்த 7 நாட்கள் – விமர்சனம்
25 Sep 2025
வானியற்பியல் ஆராய்ச்சி மாணவரான அஜிதேஜ், சூரியகிரகண ஆய்வில் ஈடுபடும் போது, எதிர்பாராதவிதமாக அதிசய திறனை பெற்றுக் கொள்கிறார். அந்த திறன் மூலம் பிறருக்குக் காலையில் நிகழப்போகும் அபாயங்களை முன்கூட்டியே காணும் ஆற்றல் அவருக்கு கிடைக்கிறது. இதன் நடுவே, தனது காதலி ஸ்ரீஸ்வேதா மிகப்பெரும் ஆபத்தில் சிக்க இருப்பதை அறிந்து அதிலிருந்து அவளை காப்பாற்ற முயற்சிக்கும் அவரது ஏழு நாள் போராட்டமே "அந்த 7 நாட்கள்". அவர் வெற்றி பெறுகிறாரா? தோல்வியடைகிறாரா? என்பதே கதையின் முக்கிய சுருக்கம்.
அறிமுக நாயகனாக நடித்துள்ள அஜிதேஜ், தனது கதாபாத்திரத்திற்கு அழகு மற்றும் ஆழத்தை சேர்த்துள்ளார். காதல், கலக்கம், பயம், போராட்டம்… ஒவ்வொரு நிலையில் மாற்றமற நடித்து நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.
நாயகியாக நடித்துள்ள ஸ்ரீஸ்வேதா, அழகில் மட்டும் ஈர்க்காமல், தனது நடிப்பால் படத்தில் நிறைவூட்டியுள்ளார். உடல் மற்றும் மனநிலைக் காட்சிகளை வெளிப்படுத்திய விதம், குறிப்பாக இறுதிக்கட்டத்தில் ஏற்படும் அவரது உள, உடல் மாற்றங்கள், பார்வையாளர்களை நெகிழ வைக்கின்றன.
அமைச்சராக கே.பாக்யராஜ், நாயகனின் தந்தையாக நமோ நாராயணன், நாயகியின் தந்தையாக நடித்துள்ளவர் ஆகியோர் திரைக்கதையில் சுருக்கமாகத் தோன்றினாலும், தங்கள் திரை இருப்பால் படத்திற்கு வலிமை சேர்த்துள்ளனர்.
சச்சின் சுந்தரின் இசை, காதல் காட்சிகளுக்கு மென்மையையும், பரபரப்பு காட்சிகளுக்கு உயிரோட்டத்தையும் வழங்குகிறது.
ஒளிப்பதிவாளர் கோபிநாத் துரையின் காட்சிகள் சீரிய வண்ணங்களுடன் உணர்வுகளைத் தெளிவாக பதிவு செய்திருக்கின்றன. குறிப்பாக, நாயகியின் உடல் மாற்றக் காட்சிகள் விசுவாசத்துடன் காட்சியளிக்கின்றன.
முத்தமிழன் ராமுவின் தொகுப்பு, நாயகன்–நாயகியை மையமாகக் கொண்ட கதை எனினும் சலிப்பின்றி நகர்த்தியுள்ளார்.
எம்.சுந்தர் எழுதி, இயக்கியிருக்கும் இந்த படம், காதலை அறிவியல் அதிசயத்துடன் கலக்க முயற்சிக்கிறது. தெருநாய்கள் கடிக்கும் பிரச்சனை மற்றும் அதனால் உண்டாகும் ரேபிஸ் தாக்கத்தை திரைக்கதையோடு இயல்பாக இணைத்து அதிர்ச்சி தரும் ஒரு கோணத்தையும் சேர்த்திருக்கிறார்.
முக்கிய கதைக்கரு சுவாரஸ்யமாக இருந்தாலும், திரைக்கதை ஒழுங்கில் சில இடங்களில் பலவீனம் காணப்படுகிறது. குறிப்பாக முதல் பாதி மெதுவாக நகரும் போதிலும், இரண்டாம் பாதியில் வரும் ரேபிஸ் தொடர்பான காட்சிகள் பரபரப்பை அதிகரித்து பார்வையாளர்களை பயம் கொள்ளச் செய்கின்றன.
வானியற்பியல் பின்னணியில் ஒரு காதல் கதை" எனும் சுவாரஸ்யமான சோதனை முயற்சியாக "அந்த 7 நாட்கள்" நிச்சயமாக நினைவில் நிற்கும் முயற்சியாக அமைகிறது. சற்றே குறைபாடுகள் இருந்தாலும், வித்தியாசமான கதைகரு மற்றும் இறுதிப் பகுதியில் உருவாகும் பதட்டம் பார்வையாளரை ஈர்க்கும்.
Tags: antha 7 naatkal