ஆழி - விமர்சனம்

27 Feb 2026

மாதவ் ராமதாசன் எழுதி இயக்கிய ‘ஆழி’ படம், ஒரு மீன்பிடி படகில் நடக்கும் இரண்டு மணி நேர உயிர் பிழைப்புப் போராட்டத்தை மையமாக வைத்து, தந்தை-மகள் உறவு, காதல் மற்றும் குற்ற உலகத்தின் இருண்ட பக்கங்களை ஒன்றிணைத்து சொல்ல முயற்சித்துள்ளது. வழக்கமான திரில்லர்களுக்கு அப்பாற்பட்டு, ஆழ்கடலின் பின்னணியில் நிகழும் மன-உடல் மோதல்கள் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தருகின்றன.

மீன்பிடி படகு மெக்கானிக்காகப் பணியாற்றும் சரத்குமார், அதே நேரத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், கல்லூரி மாணவியான அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ், உடன் படிக்கும் இளைஞர் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். வறுமையான குடும்பப் பின்னணியைக் கொண்ட இந்திரஜித்துடனான காதல் விவகாரம் சரத்குமாருக்கு தெரிய வர, கோபமடைந்த அவர் இந்திரஜித்தை கடத்தி ஆழ்கடலுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவரை உயிருடன் விடாமல் முடித்துவிடத் திட்டமிடும் தந்தையிடமிருந்து தப்பிக்க இந்திரஜித் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளும், அதன் விளைவுகளும்தான் படத்தின் மீதிக்கதை.

ஆழ்கடலில் பயணிக்கும் ஒரே மீன்பிடி படகு, அதில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள், அவர்களுக்கிடையேயான உளவியல் மற்றும் உடல் ரீதியான மோதல்கள் ஆகியவற்றை மட்டும் வைத்து இரண்டு மணி நேரத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாசன்.

அப்பா வேடம் சரத்குமாருக்கு புதிதல்ல என்றாலும், இம்முறை கொடூரமான தந்தை உருவத்தை வேறு பாணியில் கொண்டு வர முயற்சித்துள்ளார். வழக்கமான பாச உணர்வுள்ள அப்பா ஒருபுறம், மறுபுறம் இரக்கமற்ற வில்லன் என இரு முனைகளையும் காட்டியுள்ளார். அதிக முடி, ஒட்டுத் தாடி என வெளித்தோற்றத்தில் மாற்றம் கொடுத்திருந்தாலும், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், தனக்குக் கொடுக்கப்பட்ட பணிக்கு ஏற்றவாறு தனது நடிப்பை திருப்திகரமாக வழங்கியுள்ளார்.

இளம் நாயகனாக அறிமுகமாகும் இந்திரஜித் ஜெகஜித், தனித்துவமான தோற்றத்தில் வந்திருந்தாலும், கதாபாத்திரத்துடன் முழுமையாக ஒன்றிணையாமல் நடித்துள்ளார். மரண பீதியிலிருந்து தப்பிக்க அவர் மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளில் தேவையான பதற்றமும், விறுவிறுப்பும் இல்லை.

சரத்குமாரின் மகளாக நடித்த தேவிகா சதீஷ், இளமையான அழகுடன் கவர்ந்திழுக்கிறார். அவருக்கு ஒதுக்கப்பட்ட காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவற்றை நேர்த்தியாகக் கையாண்டு பார்வையாளர்கள் மனதில் நீடித்து நிற்கிறார்.

வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரை செல்வி உள்ளிட்ட பல மூத்த நடிகர்கள் சிறிய வேடங்களில் தோன்றியிருந்தாலும், கதையின் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆழ்கடலில் செல்லும் மீன்பிடி படகில் நடைபெறுவதால், மினியேச்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் என்.நாயர். படகின் உட்புற சண்டைக்காட்சிகள் மற்றும் இன்ஜின் அறை போன்ற குறுகிய இடங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள் மட்டுமே ஓரளவு கவனத்தை ஈர்க்கின்றன.

ஜாஸி கிப்ட் இசையில் அமைந்த பாடல்கள் சுமாரான அளவில் இருக்கின்றன. வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசையும் அதே அளவில் தான்.

ரசூல் பூங்குட்டியின் ஒலி வடிவமைப்பில் புதுமை ஏதும் இல்லை. கடலின் அலைகள், படகின் இயக்க ஒலிகள் என கச்சிதமாகப் பதிவு செய்திருந்தாலும், அவை பார்வையாளர்களை உணர்வுபூர்வமாகத் தொடவில்லை.

படத்தொகுப்பாளர் கே.ஸ்ரீநிவாஸ், இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான கதையை ஓரளவு இறுக்கமாக நகர்த்த முயற்சித்திருந்தாலும், அடிப்படைத் திரைக்கதையில் அழுத்தம் இல்லாததால் அவரது பணியும் படத்துக்கு பெரிய பலம் சேர்க்கவில்லை.

எழுதி இயக்கிய மாதவ் ராமதாசன், ஆழ்கடலில் உயிருக்கு ஆபத்தான சூழலில் இரு பாத்திரங்களின் பயணத்தை பரபரப்பாகச் சொல்ல முயன்றுள்ளார். ஆனால், கடலுக்கு செல்லும் காரணமும், அங்கு சிக்கும் சூழலும் போதுமான அளவு வலுவாக இல்லாதது பெரிய பலவீனம். போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற குற்றங்களை ஒருவர் தனியாகச் செய்வது போன்ற காட்சிகள் பெரிய லாஜிக் பிழைகளாகத் தெரிகின்றன.

முதல் பாதியில் தப்பிக்கப் போராடும் நாயகன், இரண்டாம் பாதியில் காயமடைந்த வில்லனைக் காப்பாற்ற முயல்வது என திருப்பங்களை அமைத்திருந்தாலும், எதுவும் பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கவில்லை.

படம் முழுவதும் பல குறைகள் இருந்தாலும், இறுதிக் காட்சியில் இந்திரஜித் தன் உடலில் வழியும் இரத்தத்தால் தன் பெயரையும், காதலியின் பெயரையும் எழுதி காதலின் தீவிரத்தை நிரூபிக்க, அதற்கு பதிலாக சரத்குமார் தன் நெஞ்சில் பச்சை குத்திய மகள் பெயரைக் காட்டும் அந்த ஒரு காட்சி மட்டுமே புதிதாகவும், மனதைத் தொடுவதாகவும் அமைந்துள்ளது. அது, காதலைக் காட்டிலும் தந்தை-மகள் இடையேயான அன்பும் பந்தமும் மிகப் பெரியது என்பதை அழகாக வலியுறுத்துகிறது.

மொத்தத்தில், ‘ஆழி’ ஒரு சில பலமான காட்சிகளுடன் வந்திருந்தாலும், திரைக்கதையின் பலவீனங்கள் காரணமாக முழுமையான திருப்தியை அளிக்காத படம். கடல் பின்னணி திரில்லர் ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம்.

Tags: aazhi, sarathkumar

Share via: