போர்த் புளோர் - விமர்சனம்

27 Feb 2026

எல்.ஆர்.சுந்தரபாண்டியன் எழுதி இயக்கியுள்ள ‘போர்த் புளோர்’படம், வழக்கமான பேய்க் கதைகளுக்கு அப்பாற்பட்டு, காதல், குடும்ப உறவு, சமூகப் பிரச்சினை, குற்றம் ஆகிய பல அடுக்குகளை ஒன்றிணைத்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறது.

 

மும்பையில் இருந்து சென்னைக்கு இடம்பெயரும் ஒரு இளம் மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கையில் நிகழும் மர்மமான சம்பவங்கள், இரவு நேரக் கனவுகள், திடுக்கிடும் உண்மைகள் என கதை பயணிக்கும் விதம் மிகவும் புதுமையானது.

ஐ.டி. துறையில் பணியாற்றும் இளைஞர் ஆரி அர்ஜுனன், பணி மாற்றம் காரணமாக மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார். சென்னையின் புறநகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியில், யாரும் வசிக்காத ஒரு வீட்டில் தங்குகிறார். தனது பணியுடன், தன்னைக் காப்பாற்றுமாறு தொலைபேசியில் உதவி கேட்ட தனது முன்னாள் காதலியைத் தேடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். அந்த வீட்டில் அவரது முன்னாள் காதலியின் புகைப்படத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். இரவு நேரங்களில் தொடர்ந்து வரும் அமானுஷ்யமான கனவுகள் அவரைப் பாதிக்கின்றன.

கனவு என்றாலும் நிஜம் போல உணரும் அந்தச் சம்பவங்கள் மூலம், தன்னைச் சுற்றி ஏதோ ஒன்று நடப்பதை உணரும் ஆரி, கனவுகளுக்கான விடையைத் தேடி பயணிக்கிறார். அப்போது பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின்றன. அந்த உண்மைகள் என்ன? மாயமான அவரது முன்னாள் காதலி கிடைத்தாரா? அவருக்கும் ஆரியின் கெட்ட கனவுகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பன போன்ற கேள்விகளுக்கு, திடுக்கிடும் திருப்பங்களுடன் பதில் சொல்லும் படம் இது.

ஆரி அர்ஜுனன் தனது கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். கணினித் துறை இளைஞராகத் தொடங்கும் அவர், படம் முழுவதும் துப்பறியும் வல்லுநராக மாறி, காதல் பிரிவின் வேதனை, குழந்தை பற்றிய உண்மை தெரிந்த பிறகு ஏற்படும் குற்ற உணர்வு, தொலைந்த காதலியை மீட்டெடுக்கும் தீவிரம், அமானுஷ்யத்தால் ஏற்படும் பயம் என பல்வேறு உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். இது கதாநாயகனுக்கு மட்டுமல்ல, திரைக்கதைக்கும் பெரும் பலம் சேர்க்கிறது.

பவித்ரா மற்றும் தீப்ஷிகா ஆகிய இரு நாயகிகளும் அழகு, நடிப்பு இரண்டிலும் சம அளவில் சிறப்பாகப் பயணித்து தங்களது பணியை திருப்திகரமாக நிறைவேற்றியுள்ளனர். வில்லனாக சுப்பிரமணிய சிவா முதல் பாதியில் முகபாவனைகளாலும், இரண்டாம் பாதியில் நடிப்பின் மூலமும் மிரட்டியுள்ளார். இருப்பினும், அமானுஷ்யத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் அவரது வில்லத்தனம் சற்று மங்கியே தெரிகிறது.

தலைவாசல் விஜய் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளனர். தரண்குமார் இசையில், கு.கார்த்திக் வரிகளில் அமைந்த பாடல்கள் இனிமையாக இருந்தாலும், ஏற்கனவே கேட்ட உணர்வை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசை திகில் காட்சிகளில் பதற்றத்தை அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண், படத்தின் தலைப்பிற்கு ஏற்ப அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் நான்காவது தளத்தின் பயங்கரத்தை அழகாகப் படம் பிடித்துள்ளார். ராம் சுதர்ஷனின் படத்தொகுப்பு, திகில், குற்றத் திரில்லர், சமூகப் பிரச்சினை ஆகிய அம்சங்களை எதிர்பார்ப்புடன் நகர்த்திச் செல்கிறது.

எழுதி இயக்கிய எல்.ஆர்.சுந்தரபாண்டியன், வெறும் திகில் காட்சிகளுடன் நிறுத்தாமல், காதல், திருமண உறவு, குழந்தை உணர்வு, சமூகப் பிரச்சினை, குற்றத் திரில்லர் என பல்வேறு அடுக்குகளை அழகாக இணைத்து, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளார். நாயகனைச் சுற்றியே அமானுஷ்யம் நிகழ்வதால், சில இடங்களில் கதை சற்று மெதுவாக நகர்கிறது என்பது ஒரு சிறு குறை. ஆனாலும், தொலைந்த காதலியின் நிலை, குழந்தையின் உண்மை, அவர்களைத் தேடும் நாயகன் என அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் படம் விறுவிறுப்பாக முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில், ‘ஃபோர்த் ஃப்ளோர்’ திகில் ரசிகர்களுக்கும், திருப்பம் விரும்பும் பார்வையாளர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் ஒரு படம். திரையரங்கில் அனுபவிக்க வேண்டிய படம்!

Tags: fourth floor

Share via: