தடயம் - வெப் சீரிஸ் - விமர்சனம்

27 Feb 2026

அதிர்ச்சியில் ஆழ்த்திய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வெப் சீரிஸ் ‘தடயம்’.

 

நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கிய இந்தத் தொடர், தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தொடர் படுகொலைகளை மையமாக வைத்து, காவல்துறையின் தீவிர விசாரணை, மர்மமான தடயங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அடுத்தடுத்த அத்தியாயங்களில் அவிழ்த்துப் போடுகிறது. வழக்கமான க்ரைம் தொடர்களுக்கு அப்பால், உண்மையின் கசப்பான பக்கங்களை நுட்பமாகச் சொல்லி பார்வையாளர்களை இருக்கையோரம் ஒட்ட வைக்கும் அனுபவம் இது.

ஆந்திர எல்லையை ஒட்டிய தமிழக கிராமத்தில் ஒரு தம்பதியர் கொடூரமாகப் படுகொலை செய்யப்படுகிறார்கள். அந்த வழக்கை விசாரிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரகனி சில முக்கியமான சான்றுகளை சேகரித்து வைத்திருக்கும் நிலையில், அதே முறையில் மற்றொரு தம்பதியர் கொல்லப்படுகிறார்கள். நான்கு பேர் உயிரிழந்ததால் பரபரப்பான காவல்துறை, இன்ஸ்பெக்டர் ஷிவதா தலைமையில் சிறப்புப் படையை அமைக்கிறது. உயர் அதிகாரியின் எதிர்ப்பையும் மீறி சமுத்திரகனியை குழுவில் சேர்க்கும் ஷிவதா, விசாரணையின் போது பெரும் அதிர்ச்சியைச் சந்திக்கிறார்.

கொலை செய்தது இரண்டு பேர் மட்டுமே என்றும், அவர்கள் நான்கு பேரை மட்டுமல்ல, சுமார் அறுபதுக்கும் மேற்பட்டவர்களை பல ஆண்டுகளாகக் கொன்றிருக்கிறார்கள் என்ற உண்மையை சமுத்திரகனி கண்டுபிடிக்கிறார். கொல்லப்பட்டவர்களின் வீடுகளில் இருந்த பணம், நகைகள் எதுவும் தொடப்படாமல், ஆணின் இடுப்பு அருணாக்கயிறும், பெண்ணின் தாலிச் சங்கிலியும் மட்டும் எடுக்கப்பட்டிருப்பது முக்கிய சான்றாக அமைகிறது. முகம் தெரியாத இந்தக் கொலையாளிகளைப் பிடிக்கும் போராட்டம், அவர்களின் தொடர் படுகொலைகளுக்குப் பின்னால் இருக்கும் இருண்ட காரணங்கள், தமிழகக் காவல்துறையின் தீவிர நடவடிக்கை என அனைத்தையும் பல்வேறு திருப்பங்களுடனும், பதற வைக்கும் உண்மைகளுடனும் சொல்கிறது ‘தடயம்’.

முதல் அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே இரத்தம் தோய்ந்த கொலைக்காட்சியை வைத்து பார்வையாளர்களை உடனடியாகக் கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் நவீன்குமார் பழனிவேல், இரண்டாவது அத்தியாயத்தில் கொலையாளிகள் யார் என்பதை அவிழ்த்தாலும், கொலைகளுக்கான உண்மையான காரணம், அவர்களின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை ஆகியவற்றை அடுத்த அத்தியாயங்களில் அதிர்ச்சி அலைகளாகப் பரப்பி அசத்தியிருக்கிறார்.

தொடரின் மையக் கதாபாத்திரமான சமுத்திரகனி, காவல்துறை வேடங்களில் ஏராளமான அனுபவம் இருந்தாலும், இம்முறை முற்றிலும் புதிய உருவில் வந்திருக்கிறார். துறை ரீதியான ஏமாற்றங்கள் காரணமாக விரக்தியின் எல்லைக்குச் சென்ற ஒரு அதிகாரியாக மிக இயல்பாகவும், உடல் மொழியிலும் அந்தக் கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார். கூர்மையான அறிவால் குற்றவாளிகளை நெருங்கும் அவரது விசாரணை முறை மற்றும் நடிப்பு, தொடர் முழுவதும் கவனத்தை ஈர்க்கிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிவதாவாக நடித்திருக்கும் ஷிவதா, காக்கி உடையில் அழகுடன் அதிகாரத்தையும் சேர்த்து வெளிப்படுத்தியுள்ளார். அளவான, துல்லியமான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து, திரைக்கதையின் வேகத்துக்கும் பலம் சேர்த்திருக்கிறார்.

‘புஷ்பா’ புகழ் ராஜ், தன் கண்களின் பார்வை மற்றும் உடல் மொழியாலேயே பார்வையாளர்களை நடுங்க வைக்கிறார். அவரது ஒவ்வொரு செயலும் பயத்தை ஏற்படுத்துகிறது. அவரது தம்பியாக நடித்த பிரேம் தனது பங்குக்கு பயங்கரத்தை சரியாகக் கொண்டு வந்திருக்கிறார்.

மூணாறு ரமேஷ், சுந்தரபாண்டியன், கொற்றவை, விஷாகன், புலிபாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் உள்ளிட்ட மற்ற அனைத்து நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களை சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர்.

கே.கே.வின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் பின்னணி இசை, தினேஷ் குமாரின் படத்தொகுப்பு, மணிகண்டன் சந்திரசேகரின் கலை இயக்கம் ஆகிய தொழில்நுட்பக் குழுவின் பணி தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. 1999-ம் ஆண்டு காலகட்டத்துக்கு ஏற்ற லொக்கேஷன், வாகனங்கள், உடைகள், வீடுகள் என ஒவ்வொன்றையும் அற்புதமாகக் கையாண்டிருக்கிறார்கள்.

எழுதி இயக்கிய நவீன்குமார் பழனிவேல், உண்மைச் சம்பவத்தின் நுணுக்கமான விவரங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் சரியான அளவில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் ஆர்வத்தை இறுதி வரை தக்க வைத்திருக்கிறார். முதல் இரண்டு அத்தியாயங்களில் மர்மத்தை அவிழ்த்துவிட்டு, பின்னர் புதிய முடிச்சுகளைப் போட்டு, “அடுத்து என்ன?” என்ற எதிர்பார்ப்புடன் தொடரைப் பார்க்க வைக்கும் திறமை அவருக்கு மட்டுமே சாத்தியம்.

மொத்தத்தில், ‘தடயம்’ என்பது வெறும் க்ரைம் தொடர் அல்ல… உண்மையின் மிகக் கொடூரமான பக்கத்தை, அற்புதமான திரைக்கதை, நடிப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் சொல்லும் ஒரு தலைசிறந்த படைப்பு. க்ரைம் திரில்லர் ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய தொடர்!

Tags: thadayam, samuthirakani

Share via: