ஆர்யன் - விமர்சனம்

31 Oct 2025
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிருபர் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தொகுத்து வழங்கும் போது, பார்வையாளர்களுடன் அமர்ந்திருக்கும் செல்வராகவன் திடீரென எழுந்து துப்பாக்கியை உருவி அனைவரையும் பிணைக்கைதிகளாக்கி அதிர்ச்சி அளிக்கிறார். அவரிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால், அடுத்த ஐந்து நாட்களுக்குள் தினசரி ஒருவரை கொலை செய்வேன், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என சவால் விடுகிறார்.

பிணைக்கைதிகளை மீட்டு, செல்வராகவனின் மிரட்டலை விசாரிக்கும் காவல்துறை, தொடர் கொலைகளைத் தடுக்க விஷ்ணு விஷால் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கிறது. கொலையாளியை நேரடியாகத் தேடாமல், அவர் செய்ய இருக்கும் கொலைகளைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறார் விஷ்ணு. ஏன்? இதுவரை சொல்லப்படாத புதிய கோணத்தில் இதை வெளிப்படுத்தி, திரில்லர் ரசிகர்களை வியக்க வைக்கிறது 'ஆர்யன்'.

காவல்துறை சீருடையில் அழகாகத் தோன்றும் விஷ்ணு விஷால், வழக்கு விசாரணையில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு வலு சேர்க்கிறார். மானசாவுடனான காதல், திருமணம், விவாகரத்து போன்ற தனிப்பட்ட வாழ்க்கைப் பாதிப்புகளை ஒரு பாடல் வழியாகக் காட்டினாலும், தனது உணர்ச்சிமிக்க நடிப்பாலும் உடல் மொழியாலும் ரசிகர்களை ஈர்க்கிறார். கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் சேகரிக்கும் தகவல்கள், விசாரணைகள் என இறுக்கமான நடிப்புடன் படத்தின் வேகத்தைத் தக்க வைக்கிறார்.

வில்லனாக செல்வராகவன், சைக்கோ போல் பயமுறுத்தாவிட்டாலும், அடுத்து யாரைக் கொல்வார் எனும் பதற்றத்தை படம் முழுவதும் உருவாக்கி பார்வையாளர்களை இழுத்து வைக்கிறார். அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பும் உடல் மொழியும் அவரது செயல்களை நம்பச் செய்கிறது.

தொலைக்காட்சி நிருபராக ஷ்ரத்தா ஸ்ரீநாத், விஷ்ணுவின் மனைவியாக மானசா சௌத்ரி, கருணாகரன், அவினாஷ் போன்றோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உறுதுணையாக நடித்துள்ளனர்.

வேகமான திரைக்கதையும் விறுவிறுப்பான காட்சிகளும் இருந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை பின்னணி இசையால் கடத்துகிறார் ஜிப்ரான்.

பயத்தைத் தாண்டிய உணர்வை உருவாக்கும் சவாலை சாமர்த்தியமாகக் கையாண்ட ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், கேமரா கோணங்கள் மற்றும் வண்ணங்களால் பார்வையாளர்களை படத்துடன் இணைக்கிறார்.

படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷின் எடிட்டிங்கும், சண்டை இயக்குநர்கள் ஸ்டண்ட் சில்வா, பி.சி. ஸ்டண்ட் பிரபு ஆகியோரின் ஆக்ஷன் காட்சிகளும் படத்திற்கு பெரும் பலம்.

எழுதி இயக்கிய பிரவீன்.கே, புதிய கோணத்தில் சைக்கோ திரில்லர் கதையை லாஜிக்குடன் வடிவமைத்து வியக்க வைக்கிறார். கொலையாளி யார் எனத் தெரிந்தாலும், அவரது திட்டங்களும் ஹீரோவின் முயற்சிகளும் சுவாரசியமாகச் சொல்லப்பட்டுள்ளன.

பொதுவான சைக்கோ படங்களில் இரத்தம், வன்முறை காட்சிகள் இருக்கும். ஆனால் இங்கு கொலைகளை அறிவியல் ரீதியாகவும், வன்முறை இல்லாமலும் காட்டி, பெரிய சமூகப் பிரச்சனையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் வகையில் உருவாக்கியுள்ளார்.

வழக்கமான ஃபார்முலாவைத் தவிர்த்து, முற்றிலும் புதிய முயற்சியுடன் வெற்றி பெற்றிருக்கிறார் பிரவீன்.கே. திரில்லர் ரசிகர்களுக்கு புது அனுபவம் இந்த ‘ஆர்யன்’.

Tags: aaryan, vishnu vishal

Share via: