ஆண்பாவம் பொல்லாதது - விமர்சனம்

31 Oct 2025
காதல் மலர்ந்து திருமணமாகி, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ரியோ ராஜ் - மாளவிகா தம்பதி. ஆனால், சிறு ஈகோ மோதல்கள் பெரும் பிளவாக வளர்ந்து, விவாகரத்து வரை செல்கின்றன. மாளவிகா நீதிமன்றத்தை நாடி விடுதலையைத் தேட, ரியோ ராஜ் இன்னும் அவளுடன் வாழ விரும்புகிறார். “விவாகரத்து பெற்றே தீருவேன்” என்ற மாளவிகாவின் பிடிவாதமும், “உன்னை விட மாட்டேன்” என்ற ரியோவின் உறுதியும் மோதும் போது, யார் வெல்கிறார்கள்? தற்காலத் தம்பதிகளின் வாழ்க்கைக்கு நெருக்கமான, கலகலப்பும் கலங்கலும் கலந்த இந்தப் பயணமே ‘ஆண்பாவம் பொல்லாதது’.

ரியோ ராஜும் மாளவிகாவும் படம் முழுக்கத் தூக்கிச் சுமக்கின்றனர். இருவருக்கும் இடையிலான வேதியியல் அபாரம்; சண்டை, சமாதானம், சிரிப்பு, செண்டிமெண்ட் என அனைத்தும் இயல்பாக ஓடுகின்றன. தினசரி சிறு சச்சரவுகள் திரையில் நடக்கும் போது, “இது நம்ம வீடுதான்!” என்று பார்வையாளர்கள் கைதட்டி, விசில் அடிக்கின்றனர். ரியோவின் துள்ளல், மாளவிகாவின் உடல்மொழி – இருவரும் காட்சிகளுக்கு உயிரூட்டுகின்றனர்.

வழக்கறிஞராக வரும் விக்னேஷ்காந்த் நகைச்சுவையைத் தாண்டி செண்டிமெண்ட்டால் கலங்கடிக்கிறார். ஷீலாவும் எதிர் வழக்கறிஞராக தனது பங்கைத் துல்லியமாக நிறைவேற்றி, மனதில் நிற்கிறார். விக்னேஷின் உதவியாளர் ஜென்சன் திவாகர் – அறியாமையும் அப்பாவித்தனமும் கலந்த காமெடியால் திரையரங்கை அதிர வைக்கிறார்.

சித்து குமாரின் இசை இனிமையாக ஒலிக்கிறது; பின்னணி ஸ்கோர் உணர்வுகளைத் தாங்கி நகர்கிறது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு காட்சிகளைப் பளிச்சென்று பதிவு செய்கிறது.

சிவகுமார் முருகேசன் - கலையரசன் தங்கவேல் எழுதிய திரைக்கதை, ஈகோவின் விளைவுகளைச் சிரிப்பாகத் தொடங்கி, யோசிக்க வைக்கும் ஆழத்துடன் முடிகிறது. இயக்குநர் கலையரசன் தங்கவேல், சோஷல் மீடியா மோகம், சுதந்திரத்தின் தவறான பயன்பாடு, குடும்பப் பிளவு எனத் தற்காலப் பிரச்சனைகளை கலகலப்பாகக் கையாண்டு, இளைஞர்களையும் தம்பதிகளையும் சிந்திக்க வைக்கிறார்.

ஒவ்வொரு காட்சியும் நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமானது, உங்கள் வீட்டில் நடக்கும் சம்பவங்களைத் திரையில் பார்ப்பது போன்ற உணர்வு. சிரிப்பும் கண்ணீரும் கலந்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ – தவறவிடாதீர்கள்!

Tags: aanpaavam pollathathu

Share via: