நன்றி சென்னை, விடை பெற்றார் ஹர்பஜன் சிங்

உலக அளவில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனுக்கான வீரர்களை தக்க வைத்துக் கொள்வது மற்றும் வீரர்களை விடுவிப்பது பற்றிய அறிவிப்பை அனைத்து ஐபிஎல் டீம்களும் இன்று மாலைக்குள் தெரியப்படுத்த வேண்டும்.

அதன் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கை விடுவித்துவிட்டதாகத் தெரிகிறது.

2019ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வந்தார் ஹர்பஜன். அடிக்க தமிழில் டுவீட் செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த வருட சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

கடந்த வருடம் கொரானோ தொற்று காரணமாக எமிரேட்ஸில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற போது ஹர்பஜன் விளையாடச் செல்லவில்லை.

இந்நிலையில் சென்னை அணியை விட்டுப் பிரிவதைப் பற்றி ஹர்பஜன் சிங் டிவிட்டரில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் என்னுடைய ஒப்பந்தம் முடிவடைகிறது. இந்த அணியுடன் விளையாடியது மிகச் சிறந்த அனுபவம். இன்னும் வருடங்கள் ஆனாலும் சில மறக்க முடியாத நண்பர்கள், அழகான நினைவுகள் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கு நன்றி. அற்புதமான 2 வருடங்களுக்காக ரசிகர்கள், ஊழியர்களுக்கு நன்றி, வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த வருடம் எமிரேட்ஸ் சென்று பின்னர் திரும்பிய சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் தக்க வைத்துக் கொள்ளப்படுவாரா என்பது குறித்தும் ரசிகர்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.