ஸ்ரீகாந்த் நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்

07 Sep 2021

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தி ஜர்னி ஆஃப் பெட்’ (The  Journey Of Bed). 

வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி இயக்கும் படம் இது. ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க, சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

படம் பற்றி இயக்குநர் மணிபாரதி கூறுகையில்,

“இது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி. ஸ்ரீகாந்த் ஐ.டி.யில் பணிபுரியும் இளைஞராக நடித்துள்ளார். ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும் அதைத் தொடர்ந்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் படத்தின் கதை. சுருக்கமாகச் சொன்னால் ஒரு விஷயத்தை குருட்டாம்போக்கில் அணுகினால் அது நம்மை மேலும் சிக்கலில் கொண்டுபோய் விடும் என்பதை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளோம்.

ஊட்டியைச் சுற்றி உள்ள வனப்பகுதியில் கிட்டத்தட்ட 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். சிருஷ்டி டாங்கே இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

குளிரும் மழையும் படப்பிடிப்பு சமயத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தன. ஒவ்வொரு நாளும் வெறும் 4 அல்லது 5 மணிநேரங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிந்தது.

கொரோனா தாக்கத்திற்கு முன்பு பாதி படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டோம். ஆனால் முதல் அலை சற்று ஓய்ந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடத்தப் போன சமயத்தில் முறையான காவல்துறை அனுமதி இருந்தாலும் கூட, அந்த பகுதியைச் சேர்ந்த மக்களிடமிருந்து எங்களுக்கு மிகப் பெரிய எதிர்ப்பு எழுந்தது.

கொரோனா குறித்த அச்சத்தில் இருந்த அவர்களிடம், படப்பிடிப்பில் நாங்கள் கடைபிடிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விளக்கி, ஒருவழியாக படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்,” என்கிறார்.

தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

Tags: srikkanth, srushti dange, manibharathi

Share via: