அரசியல் - பெரிய முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்
29 Dec 2020
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என இந்திய சினிமாவில் கடந்த 45 வருடங்களாக மிகப் பெரும் நட்சத்திரமாக உலா வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த்.
1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியின் அமோக வெற்றிக்கு ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினிகாந்த் அப்போது தெரிவித்த குரல் ஒரு காரணமாக அமைந்தது என்பதுதான் இன்று வரையில் அவருடைய அரசியல் வாழ்க்கையின் ஆரம்பப் புள்ளியாக இருந்து வந்தது. இப்போது அரசியலுக்கு வராமலேயே தன் எதிர்கால அரசியலுக்கும் சேர்த்து ஒரு பெரிய முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார் ரஜினிகாந்த்.
இன்று காலை அவர் வெளியிட்ட அறிக்கையில் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலை விட்டு விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பலர் மனதில் எழக் கூடிய கேள்விகளுக்கும் சேர்த்து மொத்தமாக மூன்று பக்கங்களில் விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்.
இதற்கு மேலும் அவரை அரசியலுக்கு வாருங்கள் என்று யாரும் அழைக்க மாட்டார்கள் என்று நம்புவோம். அவரும் அப்படிப்பட்ட அழைப்புகளைத் தவிர்ப்பார் என்பதும் உறுதியாகி உள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன்பாக 2017ம் ஆண்டு மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற ஒன்றை ஆரம்பித்தார்.
“சிஸ்டம் சரியில்லை, போர் வரட்டும், ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி, நாடு சுடுகாடா போயிடும், கந்தனுக்கு அரோகரா, அனுபவமோ பாடம், மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என டிவிட்டரில் அடிக்கடி டிரென்டிங்கில் வரும் அளவிற்கும், டிவி சேனல் விவாதங்களுக்கு இடம் கொடுக்கும் விதத்திலும் அடிக்கடி பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.
இந்த மாதம் 3ம் தேதி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு” என மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
“ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்..அற்புதம்..அதிசயம்..நிகழும்” என்றார்.
டிசம்பர் 31ம் தேதிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்ற அவருடைய இன்றைய அறிக்கை அவரை நம்பி அரசியலில் இறங்கக் காத்திருந்து அவரது ரசிகர்களில் சிலருக்கும், அவரை தங்கள் கூட்டணியில் வைத்துக் கொள்ள ஆசைப்பட்ட சில கட்சியினருக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.
இருப்பினும் அவருடைய உடல்நலம் கருதி ‘அரசியல் இல்லை’ என்ற அவருடைய முடிவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சிகள், ரசிகர்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் நல்ல உடல்நலத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என அனைவரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இனி, மீடியா உலகினரும், அரசியல் கட்சியினரும் அவரை எந்தவிதமான தொந்தரவும் செய்ய மாட்டார்கள் என்று நம்புவோம்.
Tags: rajinikanth