‘அண்ணாத்த’ படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த்

12 May 2021

சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கம் படம் ‘அண்ணாத்த’.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கான தன்னுடைய பகுதி படப்பிடிப்பை முடித்துக் கொண்ட ரஜினிகாந்த் இன்று தனி விமானம் மூலம் ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார்.

வீட்டிற்குச் சென்ற அவரை மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்றார். கொரானோ ஊரடங்கிலும் சிறப்பு அனுமதி பெற்று ரஜினிகாந்த் சென்னை திரும்பியதாகத் தெரிவிக்கிறார்கள்.

அடுத்து இப்படத்தின் டப்பிங் பணியில் ரஜினி கலந்து கொள்ள உள்ளாராம். அதை முடித்துக் கொண்டு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரஜினி வாழ்த்து தெரிவிக்க உள்ளார் என்றும் சொல்கிறார்கள்.

‘அண்ணாத்த’ படத்தை தீபாவளிக்குத் திரையிட உள்ளார்கள். 

Tags: rajinikanth, siva, annatha, d imman, keerthy suresh, nayanthara, khushbu, meena

Share via: