சூர்யா, தனுஷ் - அக்கறை உள்ள இரண்டு ஹீரோக்கள்
06 Feb 2020
தமிழ்நாட்டில் உள்ள 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடக்கும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.
அதைத் தொடர்ந்து அந்த பொதுத் தேர்வுகளுக்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வி ஆர்வலர்கள், பிரபலங்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தத் திட்டமிட்டிருந்த பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. அதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகிலிருந்து இரண்டு ஹீரோக்கள் மட்டுமே அது குறித்து கருத்து தெரிவித்து மக்கள் மீதான தங்களது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர். சூர்யா, தனுஷ் ஆகிய இருவர்தான் அவர்கள்.
சூர்யா அது குறித்து தெரிவித்துள்ளதாவது, “படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானதென்று அகரம் தன் களப் பணிகளில் உணர்ந்திருக்கிறது.
மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத் தேர்வு என்றும் தீர்வாகாது.
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்,”.
தனுஷ் தெரிவித்துள்ளதாவது, “5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது. இது குழந்தைகளுக்கு மனஅழுத்தத்திலிருந்தும் , பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையும், சமூகத்திற்கு சமத்துவ ஆரோக்கியத்தையும் நிலைபெறச்செய்யும். வாழ்த்துக்கள்.. நன்றி...“.
அவர்கள் இருவரைத் தவிர வேறு எந்த ஹீரோவும் இது பற்றி எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று
Tags: suriya, dhanush