கார்த்தி நடித்த ‘சகுனி’, சூர்யா நடித்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் பெங்களூருவைச் சேர்ந்த பிரணிதா சுபாஷ்.

தெலுங்கு, கன்னடத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த நிதின் ராஜ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. 

கொரானோ ஊரடங்கு காலம் என்பதால் மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர்.

முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் நடைபெற்ற தனது திருமணம் பற்றி டிவிட்டரில், “எனது திருமணம் பற்றி திருமணத்திற்கு முதல் நாள் கூட தகவல் தெரிவிக்காமல் போனதற்கு மன்னிக்க. கொரானோ கட்டுப்பாடு காலம் என்பதால் எப்போது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்பதில் முடிவு எடுக்க முடியாமல் இருந்தது. நீண்ட நாட்களாக அது பற்றிய குழப்பம் உங்களுக்கும் இருக்கக் கூடாது என்று நினைத்தோம். 

எங்கள் மீது பாசம் வைத்துள்ளவர்கள் இந்த சிறப்பு தினத்தில் ஒரு பகுதியாக இல்லாமல் போனதற்கு எங்களது நேர்மையான மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். நிலைமை சரியடைந்ததும் உங்களுடன் சேர்த்து இதைக் கொண்டாடுவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.