மீண்டும் அரசியல்...எதுவும் நடக்கும் - வடிவேலு

14 May 2015
வடிவேலு, சதா மற்றும் பலர் நடித்துள்ள ‘எலி’ படத்தின் பத்திரிகையாளார் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய வடிவேலுவிடம் பத்திரிகையாளர்கள் மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பதிலளித்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் வடிவேலு பேசியதாவது, “எங்க போனாலும் ஜனங்க நிறைய பேர் என்னை திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. எதுக்கு இவ்வளவு கேப் விடுறீங்கன்னு கேக்கறாங்க. கெட்ட வார்த்தைலதான் திட்டலை, அதனாலதான் இந்தப் படத்தை உடனே ஆரம்பிச்சிட்டோம். இதுவரைக்கு செந்தமிழ்ல நடிச்சது போதும்னு, லந்து தமிழ் பேசி இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். இந்தப் படத்தை குடும்பத்தோட வந்து பார்க்கலாம். படத்தில நான்தான் 'எலி'. அப்போ பூனை யார்னு கேக்கறீங்க, அவர் பேரு....பிரதீப் ரா....பாருங்க அவர் பேரு கூட வாயிலை நுழையில, 'கஜினி' படத்தில் நடிச்சாரே பிரதீப் ராவத் அவர்தான் வில்லன். இந்தப் படத்துல என் கூட ஜோடியா சதா நடிக்கிறாங்க, எனக்கு படத்துல காதல் காட்சிலாம் இல்லை. அப்படியே ஒன் சைடா லவ் பண்ணிக்கிட்டு, கற்பனைல பாடிட்டு போற மாதிரிதான் காதல் எல்லாம். காமெடியன் கூடலாம் யாரும் ஜோடியா நடிக்க வர மாட்றாங்க. இங்க யாரும் வரலைன்னா என்ன வெளியில இருந்து கூட்டி வந்துடுறோம். 'புலி' போட்டியாலாம் 'எலி' படத்தை எடுக்கலை. சிங்கம்னு எடுக்கறான், புலின்னு எடுக்கறான், நான் ‘எலி’ன்னு எடுக்கறேன். அப்புறம் ‘கரப்பான் பூச்சி’ன்னு கூட எடுப்பேன். அதெல்லாம் ஒரு தலைப்பு, அவ்ளோதான்,” என்றார் வடிவேலு. அடுத்த வருடம் சட்ட சபைக்கு தேர்தல் வருகிறது, மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, "அரசியல் கடையை தற்போதைக்கு மூடி வைச்சிருக்கேன். காமெடி கடையை திறந்து வைச்சிருக்கேன். அரசியலுக்கு வந்தாலும் வரலாம். வரமாலும் போகலாம். எலி எந்தப் பக்கம் வேணா திரும்பும்,” என்றார் வடிவேலு. இந்தப் படத்தில் வடிவேலு ‘ஆராதனா’ ஹிந்திப் படத்தில் இடம் பெற்ற ‘மேரே சப்னோம் கி ராணி...’ என்ற ஹிந்திப் பாடலுக்கு சதாவுடன் சேர்ந்து டூயட் பாடி நடித்துள்ளார். இந்தப் பாடலை பத்திரிகையாளர்களுக்காகத் திரையிட்டுக் காட்டினார்கள். வடிவேலு அவருடைய ஸ்டைலில் அந்தப் பாடலுக்கு அற்புதமான நடனமாடி வாயசைத்து நடித்துள்ளார். நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் யுவராஜ் தயாளன், தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், அமர்நாத் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

Share via: