‘ரஜினி முருகன்’ - ஜுன் 7ல் மதுரையில் இசை வெளியீடு
22 May 2015
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி மற்றும் பலர் நடிக்க பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘ரஜினி முருகன்’.
இந்தப் படத்தின் முதல் பார்வையை ஏப்ரல் 25ம் தேதியும், இசை வெளியீட்டை ஜுன் 7ம் தேதியும், பட வெளியீட்டை ஜுலை 17ம் தேதியும் நடத்தப் போவதாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே மார்ச் மாதத்தில் அறிவித்தனர்.
அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார்கள். அடுத்து இசை வெளியீட்டை ஜுன் 7ம் தேதி நடத்த உள்ளார்கள்.
பொதுவாக எந்த திரைப்பட விழாவாக இருந்தாலும் சென்னையில் நடத்துவதுதான் வழக்கம். ஆனால், வித்தியாசமாக ‘ரஜினி முருகன்’ படத்தின் இசை வெளியீட்டை மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடத்த உள்ளார்களாம்.
இதற்கான ஏற்பாடுகளை இப்போதே ஆரம்பித்து விட்டார்கள். மதுரையில் நடக்கும் விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள உள்ளார்கள். விரைவில் இது பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

