தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் ‘வட சென்னை’...
23 May 2015
“பொல்லாதவன், ஆடுகளம்” ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் ‘வட சென்னை’ படம் மூலம் இணைய உள்ளது.
வெற்றிமாறன் கடைசியாக இயக்கிய ‘ஆடுகளம்’ படம் 2011ம் ஆண்டு வெளிவந்தது. இப்போதுதான் ‘விசாரணை’ என்ற ஒரு மினி படத்தை இயக்கி உள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக வேறு எந்தப் படத்தையும் அவர் இயக்கவில்லை.
இப்போது தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘வட சென்னை’ படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாகப் பேசப்பட்டது. அது அப்படியே பேச்சு வார்த்தையுடன் நின்றுவிட்டது.
சற்று முன்னர் தனுஷ் ‘வட சென்னை’ பற்றி அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் அதிகாரப்பூவர்மாக அறிவித்துள்ளார்.
“விஐபி குழுவினரின் பெயர் அறிவிக்கப்படாத படத்திற்கடுத்து என்னுடைய அடுத்த படம் வெற்றி மாறன் இயக்கும் ‘வட சென்னை’. இந்தப் படத்தின் கதையை அவர் ‘பொல்லாதவன்’ சமயத்திலேயே சொல்லியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. சமந்தா கதாநாயகியாக நடிக்க உள்ளார். 2016ம் ஆண்டில் இந்தப் படம் வெளியாகும், மற்ற விவரங்கள் தொடரும்…” என அவர் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் மூன்றாவது முறையாக தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணைகிறது.

