கதை கேட்காமல் நடித்த தனுஷ் - பிரபு சாலமன் பெருமிதம்
04 Feb 2016
மைனா, கும்கி, கயல் என புதுமுகங்களோடு தனது பயணத்தை தொடங்கியவர் பிரபுசாலமன். தனுஷை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் இருந்த அவரை சந்தித்தோம்...
புதுமுகங்கள் என்கிற தாரக மந்திரம் தளர்ந்து போனது ஏன் ?
அந்த நினைப்பு எப்போதும் எனக்கு உண்டு. சில கதைகளின் களம் புதுமுகங்களுக்கு ஏற்றதாக இருக்கும். சில கதைகளில் அனுபவம் மிக்கவர்கள் தேவைப்படுவார்கள். இப்போது நான் இயக்கியுள்ள படத்திற்கு கதாபாத்திரத்தை தாங்கி, பிரதிபலிக்க அனுபவசாலி தேவைப்பட்டது. அதற்காக தனுஷ் தேவைப்பட்டார்.
பிரபலங்களுடன் போகும்போது அவர்களின் வசதிக்கேற்ப சில காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி இருக்குமே?
உண்மைதான், ஆனால் என் பாணி வேறு. சின்னச் சின்ன காம்ப்ரமைஸ், மென்மையான அணுகுமுறையை உருவாக்கும். அதற்குக் கூட எனக்கு இந்த படத்தில் சந்தர்ப்பம் அமைய வில்லை.
நட்சத்திர அந்தஸ்து உள்ள தனுஷை சந்தித்த நாள் டிசம்பர் 28 கிருஸ்துமஸ் கொண்டாடி விட்டு அவரை சந்தித்தேன். ஒரு படம் செய்யலாமா என்றேன் உடனே எப்பனு சொல்லுங்க வர்றேன் என்றார். கதை கூட கேட்காமல் ஜூன் 1 ஆம் தேதி முதல் 60 நாள் ஒரே கட்டமாக தேதி தந்தார்.
ஷூட்டிங் ஆரம்பித்து பத்து நாட்கள் வரை படத்தின் கதை என்ன என்பதே அவருக்குத் தெரியாது. அவரது கதாபாத்திரத்தைப் பற்றி மட்டுமே சொல்லி இருந்தேன். அதற்கு பிறகுதான் முழு கதையையும் சொன்னேன் . அதை உள் வாங்கிக் கொண்டார். ஒரு புதுமுகம் மாதிரி அருமையாக நடித்துக் கொடுத்தார். என்ன எடுக்கிறோம் என்று மானிட்டர் கூட பார்க்க மாட்டார்.
70, 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயில் மீது உயிரை பணயம் வைத்து ஓடுவது, ஸ்டன்ட் செய்வது என்று தூள் கிளப்பி இருக்கிறார்.
தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிப்பது பற்றி ?
அவர் சக்சஸ் பயணத்தில் இருக்கிறார். நடிகராக மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றிருக்கிறார். ஹாலிவுட்டில் போய் நடித்து அங்கும் வெற்றி பெற வேண்டும். கமர்ஷியலாகவும் யோசிக்கிறார், ‘காக்கா முட்டை, விசாரணை’ மாதிரி சமுதாயத்திற்காகவும் யோசிக்கிறார். பாராட்டப்பட வேண்டியவர் தனுஷ்.
அடுத்தும் பிரபல நடிகர் தான் உங்கள் இலக்கா ?
இந்த படம் முடிந்து வெளியாகிற வரை அடுத்த படத்தைப் பற்றி யோசிக்கிற ஐடியா இல்லை. எனது தயாரிப்பில் ‘சாட்டை’ புகழ் அன்பழகன் இயக்குகிற ‘ரூபாய்’ படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக யோசிக்க வேண்டி இருக்கு,” என்கிறார் பிரபு சாலமன்.
எதையுமே வித்தியாசமாக யோசிக்கும் பிரபுசாலமன் பயணம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சூடு பிடிக்கப் போகிறது, வாழ்த்துகள்.
