நடிகர் சங்க கொரானோ நிதி வசூல் - 15 லட்சம் மட்டுமே

05 Apr 2020

இந்தியாவில் 21 நாள் ஊரடங்கால் பல தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சினிமா துறை. தினமும் பல படங்களின் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை.

சினிமாவில் உள்ள தொழிலாளர்களின் நிலைமை வேறு. அவர்களுக்கு மாத சம்பளம் என்றெல்லாம் இல்லை. படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் மட்டுமே அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். பெப்ஸி என்ற தொழிலாளர் அமைப்பில் இருக்கும் அவர்களுக்கு ஓரளவிற்காவது உதவிகள் கிடைத்துள்ளன. சுமார் 1 கோடிக்கு கொஞ்சம் கூடுதலாக பணமும், சில நாட்களுக்கான அரிசியும் கிடைத்துள்ளன.

பெப்ஸி உதவி கோரிய சமயத்தில்தான் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் உதவி கோரப்பட்டது. ஆனால், இதுவரையில் அந்த சங்கத்திற்கு 15 லட்சம் மட்டுமே வசூலாகி உள்ளது.

அதில் 10 லட்ச ரூபாயை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வழங்கியுள்ளார். அவருக்கு அடுத்து நடிகர் கார்த்தி 2 லட்சம், சூரி 1 லட்சம், நாசர், எஸ்ஜே சூர்யா தலா 50 ஆயிரம் வழங்கி உள்ளார்கள். இதுவரையிலும் 20 பேர் மட்டுமே நிதியுதவி செய்திருக்கிறார்கள். அதில் 100, 5000, 10000, 25000 ஆகிய தொகைளும் அடங்கும்.

இந்த நடிகர் சங்கத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழி நடிகர்கள், நடிகைகளும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 

முன்னணி தமிழ் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி போன்றவர்களே உதவி செய்யாத போது மற்ற மொழி நடிகர்களைப் பற்றி என்ன சொல்வது ?.

தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்காக மட்டும் 6 கோடிக்கு மேல் அந்த மொழி நடிகர்கள் வசூலித்துள்ளார்கள். மேலும், பலருக்கு இலவச மருந்துகளை அளிக்கவும் வழி செய்துள்ளார்கள்.

ஆனால், தமிழ் திரைப்படத் தொழிலளார்களையே, சிறு நடிகர்கள், நடிகைகளையோ இங்குள்ள பல முன்னணி நடிகர்கள் கண்டு கொள்ளவேயில்லை என்பது வருத்தமான ஒன்று.

மனிதாபிமானம் என்பது எங்கே போனது என்றே தெரியவில்லை.

இது பற்றி பல ஊடகங்களில் செய்திகள் வந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Tags: nadigar sangam, conono, corona, covid 19

Share via: