ஹோம்பேல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், பிரஷாந்த் நீல் இயக்கத்தில், ரவி பஸ்ருர் இசையமைப்பில், யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் கேஜிஎப் சேப்டர் 2.
இப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் ( 7 ஜனவரி, 2021) அன்று யு டியுபில் வெளியிடப்பட்டது. வெளியான 76 நிமிடங்களிலேயே 1 மில்லியன் லைக்குகளைப் பெற்றது. தொடர்ந்து அதன் பார்வைகள் எண்ணிக்கை நொடிக்கு நொடி ஏறிக் கொண்டே போனது.
நேற்று இரவுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 78 மில்லியன் பார்வைகளையும், 4.2 மில்லியன் லைக்குகளையும் பெற்றது. இன்று இரவுடன் முடிவடைய உள்ள இரண்டாவது நாளுக்குள் 107 மில்லியன் பார்வைகளைக் கடந்தும், 5.6 மில்லியன் லைக்குகளையும் கடந்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.
மேலும், இதுவரையில் வெளிவந்த இந்தியப் படங்களில் அதிக பார்வைகளைப் பெற்ற திரைப்பட டீசர், டிரைலர்களில் ஹிருத்திக் ரோஷன் நடித்த ‘வார்’ பட டிரைலர் 126 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
அந்த சாதனையையும் ‘கேஜிஎப் 2’ டீசர் விரைவில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசருக்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து, கன்னடத் திரையுலகம் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகமும் மகிழ்ச்சியடைந்துள்ளது.