மசாலா பிக்ஸ், எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க கண்ணன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாக உள்ள ‘காசேதான் கடவுளா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.

சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா மற்றும் பலர் நடித்து 1972ல் வெளிவந்த ‘காசேதான் கடவுளடா’ படத்தைத்தான் தற்போது மீண்டும் ரீமேக் செய்ய உள்ளார்கள்.

இப்படத்தில் சிவாங்கி, யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். கண்ணன் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி கண்ணன் கூறுகையில்,

“மிகுந்த உற்சாகத்துடன் படப்பிடிப்பைத் துவக்கி உள்ளோம். ஒரே கட்டமாக 45 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க இருக்கிறோம். நீண்ட கோவிட் பொதுமுடக்க காலத்திற்குப் பிறகு தொழில் நுட்பக் கலைஞர்களையும்,  நடிகர்களையும் ஒன்றாக பார்ப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னொரு புறம்  தமிழின் எவர்கிரீன் கிளாசிக் காமெடி படமாக, மக்களின் மனதில் என்றென்றும் நிற்கும்  “காசேதான் கடவுளடா”  படத்தை அதன் தரம் சற்றும் குறையாமல் ரீமேக் செய்ய வேண்டிய கடமையுணர்வு உள்ளது.
  
தங்களது அற்புத நடிப்புத் திறமை மற்றும் நகைச்சுவை உணர்ச்சியால் மக்களை மகிழ்விக்கும் நடிகர் குழு இப்படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த அட்டகாசமான நடிகர் குழுவுடன், திறமை மிகுந்த  தொழில்நுட்பக் குழுவும் இணைந்து இப்படத்தினை மிகச்சிறந்த படைப்பாகத் தருவோம் எனும் முழு நம்பிக்கை உள்ளது. குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் படைப்பாக, தியேட்டரில் சிரிப்பு மழை பொழியும் படைப்பாக, இப்படம் இருக்கும்,” என்கிறார்.