ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் T.விஜய ராகவேந்திரா ‘கொரில்லா, மசாலா படம்’ மற்றும் அருண் விஜய் நடித்து விரைவில் வெளியாகவுள்ள  ‘பார்டர்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.

தற்போது விதார்த், கருணாகரன் மற்றும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி. சரித்திரன், பிரேம், சௌமியா, கவிதாலயா கிருஷ்ணன், மூணார் ரமேஷ் மற்றும் பலர் நடிப்பில் தனது  அடுத்த 6வது தயாரிப்பாக புதிய படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தை ‘உறுமீன்’ படத்தை இயக்கிய சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியது.

இயக்குனர் சக்திவேல் பெரியசாமி இப்படம் பற்றி கூறியதாவது,

“ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நம் சிந்தனையைத் தூண்டும் வகையில் உருவாகும் படைப்பு இது. தற்காலத்திய பிரச்சனைகளைச் சுற்றி நடக்கும் கதையென்பதால்  ரசிகர்கள் எளிதாக உணரும் வகையில் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் இருக்கும்.  

இந்தப் படத்தின் திரைக்கதையை  எழுதி முடித்த போது,   மக்களைக் கவரும்  ஒரு பிரபல  நடிகர் இக்கதைக்கு  தேவைப்பட்டார். கமர்சியல் சினிமாவையும் கருத்து மிகுந்த படங்களையும் இணைக்க ஒரு பாலமாக இருக்கும் நடிகரும் தேவைப்பட்டது. அந்த வகையில் பார்க்கும்போது,  முதலில் மனதுக்கு வந்தவர் நடிகர் விதார்த் மட்டும் தான். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை நிச்சயமாக பெற்றுத் தரும்.  

லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி நடிப்பை பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தான் ஏற்கும் பாத்திரங்களில், எந்த ஒரு பெரிய மெனக்கெடல் இல்லாமல் வலிமையான காட்சிகளில் கூட, மிகவும் சுலபமாக நடிக்கக் கூடிய நடிகை. இந்தப் படம் அவருடைய திரை வாழ்க்கையில்  சிறந்த படமாக அமையும். 

கருணாகரன்   நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிப்பை, உள்வாங்கி சிறப்பாக நடிக்கும் ஒரு நடிகர். அவரது நடிப்புத் திறனை வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து நிரூபித்துள்ளார்.  இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் திரைக்கதைக்கு  பெரிய அளவில் வலு சேர்க்கும் வண்ணம் மிக ஆழமாக  அமைந்துள்ளது. 

"டெடி மற்றும் 90 எம் எல்" படங்களில் நடித்துள்ள நடிகை மசூம் ஷங்கர், இந்தப் படத்தில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் சரித்திரன் தமிழகத்தின் பெரும்பான்மை  வீடுகளில்  ஒரு நகைச்சுவை நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர். ரேடியோ, தொலைகாட்சி மற்றும் இணைய தளம் வழியாக மக்களை மகிழ்வித்து வருபவர். அவர் இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  T. விஜயராகவேந்திரா கூறுகையில்,

“எங்களது தயாரிப்பில் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பார்டர்’ திரைப்படம், விரைவில் உலகளவில் தியேட்டர் வெளியீட்டிற்குத் தயாராகிவருகிறது.  இந்த காலகட்டதில், அடுத்து இந்த புதிய படத்தின் கதையைக் கேட்டபோது, எனக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை  தந்தது. உடனடியாக இப்படத்தை தயாரிப்பதென்று முடிவெடுத்துவிட்டேன், அது மட்டுமல்லாது எனது நண்பர் சக்திவேல் அவருக்காகவும் இதைத் தயாரிக்க வேண்டும் என உறுதியாய் இருந்தேன். 

இந்த படத்திற்காக ஒரு சிறந்த குழு அமைந்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்த படம் அமைவதற்கு காரணமாகவும், எந்த வித தடையுமில்லாமல் இந்த படம் ஆரம்பிப்பதற்கு உதவியாகவும் இருந்த செந்தில் அவர்களுக்கு, இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் நிறுவனத்திற்கு இது பிரத்தியேகமான ஒரு படம். குறுகிய காலத்திற்குள் படபிடிப்பு முடிந்துவிடும். படத்தை 2022-ம் ஆண்டின் துவக்கத்தில் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

அச்சு ராஜமணி -இசை, பாண்டி குமார் S - ஒளிப்பதிவு, சதீஷ்- படத்தொகுப்பு, ராகுல்- கலை இயக்கம் ஆகியோர் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணிபுரிகின்றனர்.