2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், சூர்யா, லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜெய் பீம்’.

அமேசான் ஓடிடி தளத்தில் கடந்த வாரம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியான இப்படத்தை இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ள பலரும் ரசித்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்படத்தைப் பாராட்டி இருந்தார். பல அரசியல் பிரமுகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். 

இந்தியத் திரையுலகில் உள்ள பலரும் அவர்களது பாராட்டுக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் மாதவன்

சில திரைப்படங்கள் உங்கள் கவனத்தை சிதறடித்து, உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளத் தூண்டுகின்றன. சூர்யா மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் கூட்டணியில் வெளியாகியிருக்கும் 'ஜெய் பீம்' படத்தின் புத்திசாலித்தனமான படைப்புத்திறன், படத்தை ஈடுபாட்டுடன் காணத் தூண்டுகிறது. உன்னதமான படைப்பு. அதன் நோக்கத்துடன் உங்களையும் கவர்ந்திழுக்கிறது

நடிகர் அரவிந்த்சாமி

சூர்யா மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. ‘ ‘ஜெய் பீம்’ என்ற உன்னதமான படைப்பை வழங்கிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்/

தெலுங்கு நடிகர் நானி 

ஜெய் பீம் படம் பார்த்தேன். சூர்யா சாருக்கு மரியாதை கலந்த வணக்கம். படத்தில் செங்கேணி மற்றும் ராஜாகண்ணுவாக நடித்த நடிகர்களின் நடிப்பு தனித்துவம் மிக்கது. ஒப்புயர்வற்ற மாணிக்கம் போன்ற இந்தப் படைப்பை வழங்கிய படக்குழுவினருக்கும், அவர்களது கடின உழைப்பிற்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 

ஜெய் பீம் துணிச்சலான படைப்பு. ஒடுக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்துவதுடன், நீதித்துறை மீது நம்பிக்கையும் ஏற்படுத்துகிறது. தவறாமல் காண வேண்டிய அற்புதமான படைப்பு.

இயக்குநர் பா ரஞ்சித் 

சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே, இதோ மறைக்கப்பட்ட.. மறுக்கப்பட்ட.. ராஜாகண்ணுவின் கதை போல பல கதைகள் இனிவரும். அது நம் தலை முறையை மாற்றும். ஜெய்பீம் திரைப்படத்தைக் கொடுத்த திரு. சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல், 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு பெரும் நன்றிகள்.

மேலும், இந்திய அளவில் சமூக வலைதளப் பக்கங்களில் தீவிரமாக இயங்கிவரும் ஊடகவியலாளர் சோலி அமண்டா பெய்லி, நடிகர் சித்தார்த், நடிகர் யோகிபாபு, நடிகரும், இயக்குநருமான எஸ் ஜே சூர்யா, கொல்கத்தா ஐஐடியில் பணி புரியும் ஆணையர் சுக்ரீவ் மீனா, ஒடிசா மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரியும் விஜய் ஐஏஎஸ், சட்டீஸ்கர் மாநிலத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றும் சந்தோஷ் சிங் ஐபிஎஸ், தகவல் தொடர்பு துறையில் தொழில் முனைவோராக திகழும் மயூர் சேகர் ஜா, உள்ளிட்ட ஏராளமானவர்களின் நேர்மறையான பாராட்டைப் பெற்றிருக்கிறது. ரசிகர்களின் பேராதரவும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.