‘குரூப்’ மிக சவாலாக இருந்த படம் - துல்கர் சல்மான்

10 Nov 2021

கேரளாவில் மிகப் பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீஸால் தேடப்பட்ட ஒரு குற்றவாளி ‘குரூப்’.  

அதை மையமாகக் கொண்டு, ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘குரூப்”. 

இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன், சுரபி லக்‌ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அசத்தலான ஒளிப்பதிவு, பரபரக்கும் படத்தொகுப்பு, பிரம்மாண்ட மேக்கிங் என படத்தின் ஒவ்வொரு சிறு விஷயமும்,  ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. 

மொழி எல்லை கடந்து, அனைவரிடமும் மிகப் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘குரூப்’ திரைப்படம் வரும் நவம்பர் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

‘குரூப்’ படம் பற்றி துல்கர் சல்மான் கூறுகையில்,

“இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்னுடன் இணைந்துதான் திரைத்துறைக்கு வந்தார். நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள், எங்களது முதல் படத்திலேயே ‘குரூப்’ பற்றி நிறைய விஷயங்களை  பேசிக்கொண்டிருப்பார். எப்படியாவது இந்தப் படத்தை நான் கண்டிப்பாக எடுப்பேன் என்று சொன்னார். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க முடியுமா என்று எனக்கு தயக்கமாக இருந்தது. சில வருடங்களுக்கு முன் ‘குரூப்’ ஒரு நல்ல திரைக்கதையாக வந்திருக்கிறது என்று சொன்னார். 

திரைக்கதை ஸ்டைலே புதிதாக இருந்தது. கண்டிப்பாக இப்படத்தை பண்ணவேண்டும் என்று அப்போதுதான் முடிவு செய்தோம். குரூப் குடும்பத்திலிருந்து ஏதாவது பிரச்னை வரும் என்ற யோசனை இருந்தது. நல்ல வேளை எந்த ஒரு தடையும் வரவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திலிருந்து எவருக்கும் பிரச்சினை வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம். 

படம் உருவான பிறகு அவர்களை அழைத்து, படத்தை போட்டுக்காட்டினோம். உங்களுக்கு ஏதாவது தவறாகத் தெரிந்தால் சொல்லுங்கள் மாற்றி விடுகிறோம் என்றோம். அவர்கள் மனதின் வலியை வைத்துக் கொண்டு பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கமில்லை. அவர்களுக்கு படம் பிடித்திருந்தது. அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி தான். 

இந்தப் படத்திற்குப் பின்னால் கடும் உழைப்பு இருக்கிறது. மூன்று வருட ஆராய்ச்சிக்குப் பிறகுதான் திரைக்கதையை அமைத்தோம். ஒவ்வொரு நடிகருமே, உண்மையில் வாழ்ந்தவர்களை பிரதிபலித்துள்ளார்கள். அந்த கால கட்டத்தைக் கொண்டு வருவது எல்லாம் மிக கடினமாக இருந்தது. அந்தக் கால மும்பையை எல்லாம் திரும்ப திரையில் கொண்டு வந்திருக்கிறோம். 

‘குரூப்’ எனக்கு மிக சவாலாக இருந்த படம் என் வாழ்வில் மிக முக்கியமான படமும் கூட. ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைத் தரும்,” என்றார்.

“குருப்” திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Tags: kurup, dulquar salman, srinath rajendiran

Share via: