ஜெய் பீம், தாக்கத்தை ஏற்படுத்தும் - சூர்யா
29 Oct 2021
2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், சூர்யா, லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜெய் பீம்’.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த நீதிமன்ற திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் தான் உள்ளன.
நவம்பர் 2 ஆம் தேதி உலகளவில் 240 நாடுகளில் பல்வேறு இடங்களிலும் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.
இப்படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யா படம் பற்றி பேசும் போது,
"நான் சினிமாவுக்கு வந்து 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தப் பயணத்தில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துவிட்டேன். ஆனால், எனது ரசிகர்கள் எல்லா தருணங்களிலும் என்னுடன் நின்றுள்ளனர். அவர்களுக்கு என் மீது அதீத நம்பிக்கையுண்டு. இந்த நம்பிக்கை எனக்கும் எனது ரசிகர்களுக்கும் இடையே அழகான உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவர்கள் செலுத்தும் அன்புக்கு நான் கைமாறு செய்ய வேண்டும். அதைத்தான் நல்ல படங்களில் நடித்து செய்து கொண்டிருக்கிறேன்.
இந்தத் திரைப்படம் மற்ற படங்களைப் போல், எனக்கு சவுகரியமானதாக இல்லை. நான் இது போன்ற படங்களில் இதற்கு முன் நடித்ததே இல்லை. இது எனக்கு சவாலான திரைப்படம். இந்தப் படத்தின் கதை சொல்லப்பட்ட விதம், நடிகர்கள், படத்தின் உணர்வு என எல்லாமே சற்றே கனமானதாக, அழுத்தமானதாக இருக்கும்.
இது வெறும் பொழுதுபோக்குக்கான படம் அல்ல. இது நிச்சயம் உங்களின் மனசாட்சியை அசைக்கும். உங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அப்படியே கடந்து சென்றுவிட முடியாது. நிச்சயமாக இந்தத் திரைப்படம் நீண்ட நாட்களுக்கு நினைவில் கொள்ளப்படும். இந்தப் படத்தில் நடித்துள்ளதே ஒரு பொறுப்பான செயல் தான். இனி வரும் காலங்களிலும் நான் எனது ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பான படங்களைக் கொடுக்க விடும்புகிறேன், " என்றார்.
Tags: jai bhim, suriya, tha se gnanavel, sean roldan, Prakash Raj, Rajisha Vijayan, Manikandan, Lijo Mol Jose