பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லை, ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம்
20 Apr 2021
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாளப் படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப் பெரும் விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றது.
அப்படத்தை தமிழில் தற்போது ரீமேக் செய்து வருகிறார்கள். கண்ணன் இயக்கத்தில் ராகுல் ரவிச்ந்திரன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பை தற்போது காரைக்குடியில் ஒரே கட்டமாக நடத்தி வருகிறார்கள்.
படம் குறித்து நாயகி ஐஷ்வர்யா ராஜேஷ் கூறுகையில்,
“பொதுவாக ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது மிகக் கடினம். படத்தின் அடிப்படை ஆன்மாவை அப்படியே கொண்டு வருவது என்பது முடியாத காரியம். அதனால் நான் நிறைய ரீமேக் நடிக்க மறுத்திருக்கிறேன். ஆனால் இந்தப் படம் என்னைத் தேடி வந்த போது கண்டிப்பாக செய்ய வேண்டும் என நினைத்தேன்.
இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்து இப்படத்தில் இருக்கிறது. நான் க.பெ. ரணசிங்கம் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு சிறு பெண்ணை சந்தித்தேன். அவளுக்கு எதுவும் சொல்லாமலேயே சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இன்றும் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் இல்லை. கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக இப்படம் பார்க்கப்பட வேண்டும். இயக்குநர் R.கண்ணன் அவர்களுடன் எனக்கு முதல் படம், மிகச் சிறந்த இயக்குநர், அருமையான படக்குழு, படப்பிடிப்பு அனுபவம் அற்புதமாக இருக்கிறது, படமும் மிகச்சிறப்பாக வரும்,” என்றார்.
இயக்குநர் R.கண்ணன் படம் பற்றி கூறுகையில்,
“நம் கலாச்சாரத்தில் பெண்கள் வாழ்வின் பெரும்பகுதியை சமையலறை ஆக்கிரமித்துள்ளது. இன்றைய நவநாகரீக உலகிலும் பெண்களின் அடிப்படை உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் இருப்பதில்லை. இதையெல்லாம் முகத்தில் அறைந்தாற்போல், அருமையாக சொல்லியிருந்தது “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம். பலர் இப்படத்தை தமிழில் இயக்க முயன்றார்கள், தரமான படங்களை இயக்கியிருந்ததால் என்னை நோக்கி இப்படம் வந்தது.
நகரங்களில் ஆர்டர் செய்து சாப்பிடும் ஃபாஸ்ட்புட் கலாச்சாரம் வளர்ந்திருக்கிறது. ஆனால் கிராமங்களில் பெண்கள் எந்நேரமும் சமையலறையில் தான் இருக்கிறார்கள். அதனால் தான் கதையை காரைக்குடியில் நடப்பதாக அமைத்தேன். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் காரைக்குடியை சேர்ந்தவர் என்பதால் படப்பிடிப்பு மிக எளிமையாக இருக்கிறது. படத்தின் ஆன்மா கெடாமல் சமூகத்திற்கு தேவையானதை சொல்வதே குறிக்கோள்,” என்றார்.
இயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
Tags: aishwarya rajesh, kannan, the great indian kitchen