மாரியம்மாவைக் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி - துஷாரா விஜயன்

31 Jul 2021

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யாவின் மனைவியாக நடித்தவர் துஷாரா விஜயன்.

படத்தில் அவருடைய இயல்பான நடிப்பு ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது. 1975 கால வட சென்னை பகுதி இளம் மனைவி மாரியம்மாவாக அவர் நடித்த விதம் பலரையும் ஆச்சரியப்பட வைத்து அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.

இந்தக் காலத்து மாடர்ன் பெண் ஒருவர் அந்தக் காலத்து கதாபாத்திரத்தில் நடிப்பது எளிதான விஷயமல்ல. தனக்குக் கிடைத்த வரவேற்பு, பாராட்டுக்கள் பற்றி துஷாரா கூறுகையில்,

“ரசிகர்களிடையே இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரும் வரவேற்பு மனதிற்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களுக்கு, நான் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற ஒரு சிறந்த கதாபாத்திரத்திற்காகத்தான் நான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். அது சார்பட்டா படத்தில் நடந்துள்ளது. 

ரஞ்சித் சார் ஆபீஸில் இருந்து எனக்கு போன் வந்தபோது,  முதலில் நான் யாரோ என்னை  பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்து நிராகரித்து விட்டேன். அதன் பின் அந்த எண்ணிலிருந்து 17 மிஸ்டு கால் வந்தது. விசாரித்த போதுதான் தெரிந்தது நான் மிகப்பெரிய தவறை செய்து விட்டேன் என்று. உடனடியாக ரஞ்சித் சார் ஆபீஸ் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் ரஞ்சித் சார் மிகவும் பணிவாக அதை ஏற்றுக் கொண்டு, கதையில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி விவரித்தார். 

என்னை ஒரு காட்சியை நடித்துக் காட்டச் சொன்னார்.  அவருக்கு இந்த பாத்திரத்தை செய்து விடுவேனா என்ற சந்தேகம் இருந்தது.  ஆனால் போட்டோஷூட் நடத்திய பிறகு, இந்த கதாப்பாத்திரத்தில் நான் அழாகாக பொருந்தியிருப்பதாக நம்பினார். 

இந்தப் படம் முடிந்து வெளியான பின்னரும், இன்னும்  மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. நான் இவ்வளவு வருடங்களாக  காத்திருந்த வெற்றி, இந்த சார்பட்டா படத்தில் எனக்கு அமைந்தது. 

ஆர்யா சாருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், ஷுட்டிங் ஸ்பாட்டில் அவர் எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார். நான் அவரைப் பற்றி வெளியில் கேள்விப்பட்டதற்கு முற்றிலும் மாறாக இருந்தார். அவர் மிகவும் கலகலப்பாக இருப்பார். ஷுட்டிங் ஸ்பாட்டில் எல்லோருடனும் சேர்ந்து பேசி அரட்டை அடித்துக் கொண்டிருப்பா என்று கேள்விப்பட்டேன்.

ஆனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாகவும், சீரியஸாகவும் இருந்தார். ஏனெனில் இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் மற்றவரிடம் இருந்து விலகியே இருக்கும்.  அதற்காகத்தான் அப்படி இருந்தார் என்பதை பின்னர் தான் தெரிந்து கொண்டேன். 

இயக்குனர் ரஞ்சித் அவர்கள் கூட அவரை இயல்பாக இருக்கும்படி கேட்டார். ஆனால்  அவருடைய கபிலன் கதாபாத்திரத்தை விட்டு சிறிதளவும் வெளியே செல்லாமல் தன்னை  பார்த்துக் கொண்டார். அவரின் உழைப்பு பிரமிப்பானது. அனைவரும் மாரியம்மாளை கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது,” என்கிறார் துஷாரா விஜயன்.

‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்குப் பிறகு வசந்தபாலன் இயக்கதில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் ‘சார்பட்டா’ மாரியம்மா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் நேரெதிரான  கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

Tags: sarpatta parambarai, pa ranjith, santhosh narayanan, arya, dushara

Share via: