விஜய் டிவியில் நேரடியாக வெளியாகும் ‘பூமிகா’
31 Jul 2021
ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரில்லர் படம் ‘பூமிகா’.
இப்படம் விஜய் டிவியில் நேரடியாக வெளியாகிறது. வரும் ஆகஸ்ட் 22ம் தேதி மதியம் 3 மணிக்கு இப்படத்தை தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே டிவியில் முதல் முறை ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள். இதற்கு முன்பு விஜய் டிவியில் சமுத்திரக்கனி நடித்த ‘ஏலே’, யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ ஆகிய படங்கள் இப்படித்தான் வெளியானது. அந்த வரிசையில் தற்போது ‘பூமிகா’ படமும் இடம் பெற்றுள்ளது.
பல திறமையான புதுமுகங்கள் உட்பட ஒரு பெரிய நட்சத்திரக் குழு இப்படத்தில் நடித்துள்ளனர். பிருத்வி சந்திரசேகர் இசையமைக்க, ராபர்ட்டோ ஜசாரா ஒளிப்பதிவு செய்ய ஆனந்த் ஜெரால்டின் படத் தொகுப்பு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் கூறுகையில்,
"இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தை, மக்களை சென்றடையும் தளத்தில் வெளியிடுவது மிக முக்கியம். விஜய் டிவி பிரீமியர் மூலம் நிச்சயம் எண்ணற்ற மக்களை இப்படம் சென்றடையும். ஒரு படம் அதிக ரசிகர்களை சென்றடைவதே படைப்பாளியின் இறுதி நோக்கமாகும். ஐஸ்வர்யா ராஜேஷ் முதலான, நட்சத்திர நடிகர்களின் நடிப்பால், அற்புதமான படைப்பாக உருவாகியுள்ள, இந்தப் படத்தினை கண்டிப்பாக ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார்.
தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் சுதன் சுந்தரம் பேசுகையில்,
“எங்களது ‘பூமிகா’ திரைப்படம் பிரபல ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் திரையிடப்படுவது, எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட போது ரசிகர்கள் தந்த வரவேற்பு, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. இப்போது ஸ்டார் விஜய் மூலம் எங்கள் படம், தமிழகத்தின் அனைத்து மக்களையும் சென்றடையும் என நம்புகிறோம். இப்படம் கண்டிப்பாக எல்லாருக்கும் பிடித்தமான படமாக இருக்கும்,” என்கிறனர்.
Tags: boomika, aishwarya rajesh, Rathindran R Prasad