அண்ணாத்த - 2021 தீபாவளி வெளியீடு உறுதி

01 Jul 2021

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’.

இப்படம் இந்த வருட தீபாவளி தினமான நவம்பர் 4ம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. கடந்த வருடம் கொரானோ முதல் அலை பரவிய போது படப்பிடிப்பு தடைபட்டு, அதன்பின் டிசம்பர் மாத மத்தியில் மீண்டும் அங்கேயே படப்பிடிப்பை நடத்தினார்கள். படக்குழுவினர் சிலருக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தினார்கள். 

ரஜினிகாந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சில நாட்கள் ஹைதராபாத்திலேயே தங்கியிருந்து அதன் பின்னரே சென்னை திரும்பினார்.

மீண்டும் இந்த வருடம் மார்ச் மாதம் சென்னையில் படப்பிடிப்பை நடத்தத் துவங்கி, ஏப்ரல் மாதம் மீண்டும் ஹைதராபாத் சென்றனர். கொரானோ இரண்டாம் அலை பரவினாலும் பலத்த பாதுகாப்புடன் சிறப்பு அனுமதி பெற்று அங்கேயே படப்பிடிப்பை நடத்தி முடித்தார்கள்.

தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அவை ஓரளவிற்கு முடிந்துவிட்டதால் படத்தின் வெளியீட்டை உறுதி செய்து, மீண்டும் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இப்படம் முதலில் இந்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால், கடந்த வருட கொரானோ தாக்கத்தால் படப்பிடிப்பு தாமதமானதால் ஜனவரி மாதத்திலேயே படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.

ஜினிகாந்த் நடித்து கடைசியாக கடந்த 2020ம் வருடம் ஜனவரியில் ‘தர்பார்’ படம் வெளியானது. ஏறக்குறைய இரண்டு வருட இடைவெளியில் ரஜினி நடித்துள்ள படம் வெளிவரும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் இதை டிவிட்டரில் டிரென்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

Tags: annaatthe, rajinikanth, siva, sun pictures, nayanthara, keerthy suresh

Share via: