வால்டர் - விமர்சனம்
15 Mar 2020
தயாரிப்பு - 11:11 புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - அன்பு
இசை - தர்ம பிரகாஷ்
நடிப்பு - சிபிராஜ், சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கான்ச்வாலா
வெளியான தேதி - 13 மார்ச் 2020
ரேட்டிங் - 2.75/5
அறிமுகம்
1993ம் ஆண்டு சத்யராஜ் நடித்து வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வால்டர் வெற்றிவேல்’. 27 வருடங்களுக்குப் பிறகு அப்பா நடித்த படத்தின் பெயரில் பாதியை எடுத்துக் கொண்டு ‘வால்டர்’ எனப் பெயர் வைத்து போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிபிராஜ்.
கதை
கும்பகோணத்தில் ஏஎஸ்பி ஆக இருப்பவர் சிபிராஜ். அவரது கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதியில் பிறந்த குழந்தைகள் காணாமல் போகின்றன. சில மணி நேரங்களுக்குப் பிறகு அவை கிடைக்கின்றன. ஆனால், மறுநாளே இறந்து விடுகின்றன. அதன் பின்னணியில் பெரும் சதி இருப்பதாகக் கருதி விசாரணையில் இறங்குகிறார் சிபிராஜ். விசாரணை தீவிரமடையும் சமயம், சிபிராஜையும் அவரது காதலி ஷிரின் கான்ச்வாலாவையும் கொல்ல முயற்சிக்கிறார் நடராஜ். அவர்தான் குழந்தைகளைக் கடத்தி கொலை செய்கிறாரா, அவர் எதற்காக சிபிராஜைக் கொல்ல முயற்சிக்க வேண்டும் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நடிப்பு
போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க நல்ல உயரமும், திடகாத்திரமான உடம்பும் சிபிராஜுக்குப் பொருத்தமாக இருக்கிறது. மீசையை முறுக்கி அவ்வப்போது கம்பீரத்தைக் காட்டுகிறார். அவர் நடத்தும் விசாரணையில் இன்னும் விறுவிறுப்பு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். காதலை விடவும் கடமைதான் பெரிது என நினைக்கும் கதாபாத்திரம். அப்பா பெயரைக் காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்.
சிபிராஜ் காதலியாக ஷிரின் கான்ச்வாலா. அழகாக இருக்கிறார், சிரிக்கிறார், நடிக்க இன்னும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். எம்எல்ஏ மற்றும் அமைச்சர் ஆக மெயின் வில்லனாக பவா செல்லத்துரை. நட்ராஜை வில்லன் போலக் காண்பித்து சஸ்பென்ஸ் வைத்து பின்னர் உண்மையை சொல்கிறார்கள். அதுதான் படத்தின் முக்கிய திருப்புமுனை. சமுத்திரக்கனி, ரித்விகா ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.
நிறை
குழந்தைக் கடத்தலைப் பற்றியக் கதை. பாம்பே பிளட் என புதிதாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.
குறை
கதையில் இருக்கும் அழுத்தம், திரைக்கதையில் கூடுதல் விறுவிறுப்பாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
கருத்துரை
வால்டர் - சின்ன சல்யூட்
Tags: walter, sibiraj, anubu, dharma prakash, shirin kanchwala