ஜிப்ஸி - விமர்சனம்
09 Mar 2020
தயாரிப்பு - ஒலிம்பியா மூவிஸ்
இயக்கம் - ராஜு முருகன்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - ஜீவா, நடாஷா சிங், சன்னி வெய்ன், லால் ஜோஸ்
வெளியான தேதி - 6 மார்ச் 202
மதிப்பெண் - 2.75/5
அறிமுகம்
‘குக்கூ, ஜோக்கர்’ படங்களுக்குப் பிறகு ராஜு முருகன் இயக்கியிருக்கும் படம். இப்படத்தின் தணிக்கையில் பிரச்சினைகள் எழ, பின்னர் ரிவைசிங் கமிட்டிக்குச் சென்று மறு தணிக்கை செய்யப்பட்டுதான் படம் வெளியாகி உள்ளது.
கதை
முஸ்லிம் அம்மாவுக்கும், இந்து அப்பாவுக்கும் பிறந்தவர் ஜீவா. காஷ்மீரில் குண்டு வெடிப்பில் அவர்கள் கொல்லப்பட ஒரு ஜிப்ஸி எடுத்து வளர்த்ததால் ஜீவாவும் வளர்ந்த பின் ஜிப்ஸி ஆகவே ஊர் ஊராகச் சுற்றுகிறார். தன்னுடைய குதிரையான ‘சே’ செய்யும் வித்தைகளை வைத்து பிழைப்பு நடத்துகிறார். நாகூர் திருவிழாவிற்காக வந்திருக்கும் போது அங்கு முஸ்லிம் பெண்ணான நடாஷா சிங்கைப் பார்த்து காதல் கொள்கிறார். அவருக்கும் ஜீவா மீது காதல் வர இருவரும் ஊரை விட்டு ஓடி காசி சென்று திருமணம் செய்து கொள்கிறார்கள். நடாஷா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது அங்கு நடக்கும் இந்து, முஸ்லிம் கலவரத்தில் ஜீவா கைதாகி சிறை செல்கிறார். நடாஷா காணாமல் போகிறார். சிறையிலிருந்து வெளிவரும் ஜீவா, மனைவியைக் காணாமல் தேடுகிறார். அவர் கோழிக்கோட்டில் இருப்பது தெரிந்து அங்கு சென்று மனைவியைப் பார்க்கிறார். நடாஷா மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய அப்பாவும் ஜீவாவை வீட்டுக்குள் விடவில்லை. பிரிந்த மனைவியுடன் சேர ஜீவா தன் போராட்டத்தை ஆரம்பிக்கிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
நடிப்பு
வித்தியாசமான ஹேர் ஸ்டைல், உடை என ஜிப்ஸி கதாபாத்திரத்தில் ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார் ஜீவா. அவருடைய முக்கியமான படங்களில் இந்தப் படமும் இடம் பெறும். நடாஷா சிங் தமிழுக்கு அழகான அறிமுகம், இயல்பாகவும் நடித்திருக்கிறார்.
நிறை
படத்தில் உள்ள காதல் தான் அதிகம் ரசிக்க வைக்கிறது. அழகான காதல் ஜோடிகளாக ஜீவா, நடாஷா கண்கலங்க வைக்கிறார்கள். இருவரும் சேர மாட்டார்களா என்ற ஏக்கம் வருகிறது.
குறை
ராஜு முருகன் படம் என்பதால் பல சமூகக் கருத்துக்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தால் ஏமாற்றமே. ஒரு சில காட்சிகளைத் தவிர எங்குமே படம் அழுத்தமான கருத்துக்களைப் பதிவு செய்யவில்லை, காதலை மட்டுமே பதிவு செய்துள்ளது. சமூகப் போராட்டமாக படம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் காதல் போராட்டமாக மட்டுமே அமைந்துள்ளது. ‘பம்பாய், மெஹந்தி சர்க்கஸ்’ ஆகிய படங்களை ஞாபகப்படுத்துகிறது சில காட்சிகள்.
கருத்துரை
ஜிப்ஸி - காதல் போராட்டம்
Tags: gypsy, raju murugan, jeeva, natasha singh