அசுரகுரு - விமர்சனம்

15 Mar 2020

தயாரிப்பு - ஜேஎஸ்பி பிலிம் ஸ்டுடியோஸ் 
இயக்கம் - ராஜ்தீப் 
இசை -  கணேஷ் ராகவேந்திரா 
நடிப்பு - விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு 
வெளியான தேதி - 13 மார்ச் 2020
ரேட்டிங் - 2.5/5

அறிமுகம்

அறிமுக இயக்குனர் ராஜ்தீப் இயக்கியுள்ள ஆக்ஷன் திரைப்படம் தான் ‘அசுரகுரு‘. சில வருடங்களுக்கு முன்பு நடந்த ரயில் கொள்ளையை மையமாக வைத்து கதையை எழுதியிருப்பார் போலிருக்கிறது.

கதை

விக்ரம் பிரபுவுக்கு சிறு வயதிலிருந்தே பணத்தைப் பார்த்தால் திருட வேண்டும் என்ற எண்ணம் வரும். அதனால் பாதிக்கப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படுகிறார். அங்கிருந்து வெளியில் வந்த பின்னும் சிலபல பெரிய கொள்ளைகளை செய்கிறார். கொள்ளையடிக்கும் பணத்தை எதற்கும் செலவிடாமல் வீட்டிலேயே மறைத்து வைத்து அழகு பார்க்கிறார். விக்ரம் பிரபுவிடம் தங்கள் பணத்தைப் பறி கொடுத்த ஒரு ஹவாலா கும்பல் தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் தங்கள் பணத்தைக் கண்டுபிடித்துத் தர கேட்கிறது. அங்கு வேலை செய்யும் மகிமா நம்பியார் விசாரணையில் இறங்குகிறார். காவல் துறை அதிகாரியான சுப்புராஜ் காவல்துறை தரப்பில் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அவர்கள் விக்ரம் பிரபுவைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

ஆக்ஷன் ஹீரோ கதாபாத்திரமும் விக்ரம் பிரபுவுக்குப் பொருத்தமாகவே அமைகிறது. திடீரென அவருக்கு தலைவலி, ஒரு மயக்கம் வரும் போதெல்லாம் பக்கத்தில் தெரியும் பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என நினைப்பு வந்து, அதை செய்யவும் செய்கிறார். கொள்ளையடிப்பது அவருக்கு ஒரு நோய்தான். சர்வ சாதாரணமாக கொள்ளையடிப்பதுதான் வழக்கமான தமிழ் சினிமாவைப் பார்ப்பது போல் உள்ளது.

நாயகியாக மகிமா நம்பியார், துப்பறியும் நிபுணர் கதாபாத்திரம். சிகரெட் எல்லாம் பிடிக்கிறார். எதற்கு அந்தக் கதாபாத்திரம் சிகரெட் பிடிக்க வேண்டும் எனத் தெரியவில்லை. 

நல்லவனாக நடித்து கடைசியில் தானும் ஒரு வில்லன்தான் எனச் சொல்லும் காவல் துறை அதிகாரியாக சுப்பராஜ். படத்தில் ஜெகன், யோகி பாபு ஆகியோரும் இருக்கிறார்கள்.

நிறை

படத்தின் ஆரம்பம் அசத்தலாக இருக்கிறது. போகப் போக அப்படியே கொஞ்சம் தொய்வடைய வைக்கிறது. பின்னர் கிளைமாக்சில் பரபரப்பு கூட்டுகிறார்கள்.

குறை

வழக்கம் போல நிறைய சினிமாத்தனமான காட்சிகள். இந்தக் காலத்திற்கேற்றபடி கொஞ்சம் புத்திசாலித்தனமாகக் காட்டியிருக்கலாம்.

அசுரகுரு - அசுர தொண்டன்

 

Tags: asuraguru, vikram prabhu, mahima nambiar, ganesh raghavendra

Share via:

Movies Released On March 15