தாராள பிரபு - விமர்சனம்
15 Mar 2020
தயாரிப்பு - ஸ்க்ரீன் சீன் மீடியா
இயக்கம் - கிருஷ்ணா மாரிமுத்து
இசை - அனிருத் ரவிச்சந்தர், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, மேட்லி ப்ளூஸ், ஊருகா - தி பேன்ட், ஷான் ரோல்டன், விவேக் மெர்வின்
நடிப்பு - ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக்
வெளியான தேதி - 13 மார்ச் 2020
ரேட்டிங் - 3/5
அறிமுகம்
2012ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘தாராள பிரபு’.
கதை
கால்பந்து விளையாட்டு வீரராக இருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கு நல்ல வேலை ஒன்றில் செட்டிலாக வேண்டும் என்பது ஆசை. செயற்கை கருத்தரிப்பு மையம் நடத்தும் டாக்டர் விவேக்கிற்கு விந்து தானம் செய்ய நல்ல ஆரோக்கியமான ஒருவர் தேவை. இவரது கண்ணில் படுகிறார் ஹரிஷ் கல்யாண். அழகு, ஆரோக்கியம் என இருக்கும் ஹரிஷை எப்படியோ கன்வின்ஸ் செய்து விந்து தானம் செய்ய வைக்கிறார். ஹரிஷுக்கும், தன்யா ஹோப்பிற்கும் காதல். தான் விவாகரத்து பெற்ற ஒருவர் என்ற உண்மையைக் கூட சொல்லி விடுகிறார் தன்யா. ஆனால், தான் விந்து தானம் செய்வதை மறைத்து தன்யாவைக் கல்யாணம் செய்து கொள்கிறார் ஹரிஷ். குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் தன்யாவிற்கு மருத்துவ ரீதியாக பிரச்சினை இருக்கிறது. ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்கிறார்கள் ஹரிஷ், தன்யா. அந்த சமயத்தில் ஹரிஷ், விந்து தானம் செய்பவர் என்பது தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நடிப்பு
இப்படி ஒரு கதையில் நடிக்க மற்ற தமிழ் ஹீரோக்கள் நிச்சயம் தயங்கி இருப்பார்கள். தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் படமெடுத்தால் அதை வரவேற்பார்களா என்ற தயக்கம் அதற்குக் காரணமாக இருந்திருக்கும். ஆனால், ஹரிஷ் எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்தப் படத்தில் அவ்வளவு பொருத்தமாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அந்த நடிப்பு அவரிடமிருந்து வந்திருக்கிறது.
ஏறக்குறைய இரண்டாது ஹீரோதான் விவேக். படம் முழுவதும் வருகிறார். அடிக்கல கலகலப்பூட்டுகிறார். இரட்டை அர்த்த வசனங்களைக் கூட ரொம்ப ஆபாசமில்லாமல் அளவாகப் பயன்படுத்தி இருக்கிறார்.
நாயகி தன்யா ஹோப். பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ஹரிஷுக்கு அக்கா போல காட்சியளிக்கிறார்.
நிறை
கொஞ்சம் தடம் மாறினாலும் தாறுமாறான படமாக மாறக் கூடிய ஒரு கதை. அதை எந்த இடத்திலும் தடுக்கிவிடாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். தமிழுக்கு ஏற்றபடியான காட்சிகள் நிறைவு.
குறை
இத்தனை இசையமைப்பாளர்கள் இருந்தும் ஒரு பாடலையாவது கேட்கும்படி இசைத்திருக்கலாம்.
தாராள பிரபு - தானப் பிரபு
Tags: dharala prabhu, harish kalyan, tanya hope, krishna marimuthu