பொன்மகள் வந்தாள் - விமர்சனம்

29 May 2020

தயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - பிரட்ரிக்
இசை - கோவிந்த் வசந்தா
நடிப்பு - ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன்
வெளியான தேதி - 29 மே 2020 (அமேசான் பிரைம்)
நேரம் - 2 மணி நேரம் 3 நிமிடம்
Rating - 3.25/5

கதை

ஊட்டியில் வக்கீலாக இருக்கும் வெண்பா தனது முதல் வழக்காக 16 வருடங்களுக்கு முன்பு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ‘சைக்கோ ஜோதி’ என்ற பெண்ணின் வழக்கை கையில் எடுக்கிறார். இரண்டு இளைஞர்களை சுட்டுக் கொன்றது, சில சிறுமிகளை கடத்திக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுதான் போலீசாரின் என்கவுண்டரில் மரணம் அடைகிறார் ஜோதி. இத்தனை வருடங்கள் கழித்து வெண்பா அந்த வழக்கை மீண்டும் எடுத்ததற்கு தங்கள் குழந்தைகளை பறிகொடுத்தவர்கள் கோபமடைகிறார்கள். இந்த வழக்கில் வெண்பாவின் வாதத்தை எதிர்கொள்ள பெரிய மனிதர் வரதராஜன், வக்கீல் ராஜரத்தினத்தை அழைத்து வருகிறார். தனக்கு வரும் எதிர்ப்புகளை மீறி வெண்பா நீதிமன்றத்தில் வாதம் செய்கிறார். அவர் ஏன் மீண்டும் அந்த வழக்கை கையில் எடுத்தார், அவரது வாதத்தில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு

வக்கீல் வெண்பா கதாபாத்திரத்தில் ஜோதிகா, வக்கீல் ராஜரத்தினம் கதாபாத்திரத்தில் பார்த்திபன், பெரிய மனிதர் வரதராஜன் ஆக தியாகராஜன், வெண்பா அப்பா பெட்டிஷன் பெத்துராஜ் ஆக பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஒவ்வொருவர் நடிப்பிலும் அனுபவம் விளையாடுகிறது. அதிலும் வெண்பா கதாபாத்திரத்தில் ஜோதிகாவின் நடிப்பு நாம் எதிர்பார்க்காத ஒன்று. தான் ஏன் இந்த வழக்கைத் தொடர்ந்தேன் என அவர் கூறும் காரணத்தைக் கேட்டு கண்கலங்க நேரிடும். வக்கீல்களுக்கே உரிய கணீர் குரலில் அழுத்தம் திருத்தமாக தன் சொந்தக் குரலில் பேசி நடித்து கூடுதல் பாராட்டைப் பெறுகிறார் ஜோதிகா. 

வாதத்திற்கு எதிர்வாதமும் சிறப்பாக அமைய வேண்டும். அப்படி ஒரு எதிர்வாதம் புரியும் வக்கீலாக பார்த்திபன். கிடைக்கும் இடங்களில் அவருடைய பாணி வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். பாசமான அப்பாவாக பாக்யராஜ். அமைதியாக வந்து போகும் தியாகராஜன் நீதிமன்றக் காட்சியில் தனக்கு நேரும் அவமானத்தைப் பார்த்து ஆவேசப்படும் காட்சி மிரட்டல். 

இசை, மற்றவை

கோவிந்த் வசந்தா இசையில் ஓரிரு பாடல்கள் மட்டுமே. வசனம் சார்ந்த, உணர்வு பூர்வமான படங்களுக்கு பின்னணி இசை சிறப்பாக இருப்பது அவசியம். அதை சில இடங்களில் மட்டும் சரியாகச் செய்திருக்கிறார் கோவிந்த் வசந்தா. ராம்ஜியின் ஒளிப்பதிவு நீதிமன்றக் காட்சிகளில் இயல்பான அரங்கில் நிறைவாக அமைந்துள்ளது.

நிறை

படத்தின் கதை, அதன் பின்னணி, கிளைமாக்ஸ் நோக்கி நகரும் காட்சிகள், கிளைமாக்ஸ் டிவிஸ்ட், நடித்துள்ளவர்களின் நடிப்பு.

குறை

ஆரம்ப நீதிமன்றக் காட்சிகள்,  லாஜிக் மீறிய ஒரு சில நீதிமன்றக் காட்சிகள். 

Tags: ponmagal vandhal, jothika, parthiban

Share via: