பெண்குயின் - விமர்சனம்
19 Jun 2020
தயாரிப்பு - ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம் - ஈஷ்வர் கார்த்திக்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ்
வெளியான தேதி - 19 ஜுன் 2020
நேரம் - 2 மணி நேரம் 12 நிமிடம்
ரேட்டிங் - 2/5
கதை
கர்ப்பிணியாக இருப்பர் கீர்த்தி சுரேஷ். ஆறு வருடங்களுக்கு முன்பு அவருடைய முதல் குழந்தை காணாமல் போய்விடுகிறது. கடந்த ஆறு வருடங்களில் அதைப் போல ஐந்தாறு குழந்தைகள் காணாமல் போகின்றன. காணாமல் போன தன்னுடைய குழந்தை நிச்சயம் உயிருடன்தான் இருக்கும் என நம்புகிறார் கீர்த்தி சுரேஷ். ஒரு நாள் இரவு கீர்த்தி காரில் செல்லும் போது எதிரில் வந்து உயிருடன் நிற்கிறான் காணாமல் போன குழந்தை. வீட்டுக்கு அழைத்து வந்த பின்தான் அக்குழந்தை பேசவே மாட்டேன் என்கிறான். இந்நிலையில் சார்லி சாப்ளின் முகமூடி அணிந்து குடை பிடித்து வரும் ஒரு மனிதன்தான் தன் குழந்தையைக் கடத்தியவன் என்பதைக் கண்டுபிடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவருக்கு வேறு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன என்பதுதான் இப்படத்தின் மீதிக் கதை.
நடிப்பு
ஒட்டு மொத்த படத்தையும் தாங்க வேண்டிய ஒரே கதாபாத்திரமாக கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் இருக்கிறது. இந்தப் படத்தின் மீதும், கீர்த்தியின் கதாபாத்திரம் மீதும் நமக்கு அனுதாபம் வந்தால்தான் இந்தப் படத்தை நாம் ஒன்றிப் பார்க்க முடியும். ஆனால், அப்படியான காட்சிகளை வைக்காமல் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திர வடிவமைப்பையும் சென்டிமென்ட் வரவைக்காமல் அமைத்திருக்கிறார் இயக்குனர். படம் முழுவதுமே பதட்டத்துடனும், பரபரப்புடனும் இருக்கிறார் கீர்த்தி. சோகமயமான அவரது முகத்தை படம் முழுவதும் பார்ப்பதற்கும் ஒரு மன தைரியம் வேண்டும். என்ன நினைத்து இந்தப் படத்தில் நடித்தார் கீர்த்தி என்பதுதான் புரியவில்லை.
கீர்த்தியைத் தவிர மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களின் பெயர்கள் கூட சாதாரண ரசிகர்களுக்குத் தெரியாது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணியில் உள்ள ஒரு நடிகையின் படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்களைக் கொஞ்சம் பரிச்சய முகங்களாகத் தேர்ந்தெடுத்திருக்கலாம். கீர்த்திக்கு படத்தில் இரண்டு கணவர்கள். முதல் கணவராக லிங்கா, சில பல படங்களில் குட்டி வில்லனாக கொஞ்ச நேரம் வந்து போனவர். இரண்டாவது கணவராக ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தில் நாயகனாக நடித்த மாதம்பட்டி ரங்கராஜ். இரண்டு கணவர்கள் என்ற கான்செப்ட் ஏன் என்று தெரியவில்லை. ஒரே ஒரு கணவர் என்றிருந்தால் கீர்த்தி மீது இன்னும் அனுதாபம் வந்திருக்குமோ என்னமோ ?.
இசை, மற்றவை
சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரே ஒரு பாடல் வருகிறது. அதுவும் மனதில் தங்கவில்லை. பின்னணி இசைக்குப் பொருத்தமான காட்சிகள் சில இருந்தும் இசையில் திகிலூட்ட மறந்திருக்கிறார் சந்தோஷ். கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் அடிக்கடி நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் வித்தியாசம் என்ற பெயரில் தொடர்ச்சியான பிளாஷ் பேக் காட்சிகள் இல்லாமல் ஆறு வருடம், ஐந்து வருடம், ஒரு வருடம் முன்பு என குழப்பியடிக்கிறார் படத் தொகுப்பாளர் அனில் கிருஷ்.
+
யோசித்து யோசித்துப் பார்த்தாலும் ஒன்றுமில்லை. கீர்த்தி சுரேஷ் நடிப்பு மட்டுமே, அதுவும் விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிட்டது.
-
மலையாளத்தில் பிப்ரவரி மாதம் வெளிவந்த ‘பாரன்சிக்’ படத்தின் பல காட்சிகள் இந்தப் படத்தில் உள்ளன. குழந்தைகளுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் பிடித்த நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் முகமூடி அணிந்த ஒருவர்தான் படத்தின் வில்லன் என சார்லி சாப்ளினை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். ஆறு வருடங்கள் ஒரு இன்ஸ்பெக்டர் ஒரே ஊரில் ஒரே காவல் நிலையத்தில் எப்படி வேலை பார்ப்பார் . கீர்த்தியின் காணாமல் போன குழந்தை கிடைத்தபின் அவருக்குக் கிழிந்த ஆடையைக் கூட மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். கிளைமாக்சில் குழந்தைகளைக் கடத்தியவரும், கீர்த்தியும் நேருக்கு நேர் வார்த்தை விளையாட்டு விளையாடிக் கொள்கிறார்கள். இப்படி ஒரு த்ரில்லர் படத்தில் பல அபத்தமான காட்சிகள்.
Tags: penguin, keerthy suresh, karthik subbaraj