இயக்கம் - சந்தானமூர்த்தி
இசை - சாய் பாஸ்கர்
நடிப்பு - வரலட்சுமி, கவின், துரை சுதாகர் மற்றும் பலர்
ரேட்டிங் - 2.5/5
கதை
தஞ்சாவூரில் வயல்காட்டுப் பகுதிகளில் அடுத்தடுத்து சில கொலைகள் விழுகின்றன. கொலைகளுக்கான விசாரணையை புதிதாக இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெறும் வரலட்சுமி விசாரிக்கிறார். தீவிரமாக விசாரித்து வரும் வேளையில் அவருடைய தங்கை மீது கொலை முயற்சி நடக்கிறது. அதிலிருந்து தங்கை தப்பினாலும் கண் பார்வை இழக்கிறார். இருந்தாலும் அவரையும் கொலை செய்கிறார்கள். கடும் கோபத்திற்கு ஆளாகும் வரலட்சுமி கொலையாளிகளைக் கண்டுபிடித்தும் விடுகிறார். கொலையாளிகளை அவர் எப்படி கண்டுபிடித்தார், அவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
நடிப்பு
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள கதாநாயகிகளில் ஒரு ஆளுமையான தோற்றம் கொண்டவர் வரலட்சுமி. இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார். அந்தப் பதவிக்குண்டான கம்பீரத்தை கண்முன் நிறுத்துகிறார். வசனம் பேசுவதை மட்டும் நிறுத்தி நிதானமாகப் பேசியிருக்கலாம்.
வரலட்சுமிக்கு அடுத்து படத்தில் ‘டேனி’ ஆக நடித்திருக்கும் நாய் அதன் நிஜ பயிற்சியாளர் சொன்னதை கவனமாகச் செய்திருக்கிறது. திரையில் நாய் பயிற்சியாளராக நடித்திருக்கும் கவின் நடிப்புப் பயிற்சி பெற வேண்டியது அவசியம். சப் இன்ஸ்பெக்டராக துரை சுதாகர். அவருடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இயல்பாக நடித்திருக்கிறார். இவருக்கும், வரலட்சுமிக்கும் இடையிலான பதவி மோதல்களை இன்னும் கூடுதலாக வைத்திருக்கலாம்.
நிறை
படத்தின் கிளைமாக்ஸில் பெற்றோர்களுக்கு சரியான பாடத்தைச் சொல்கிறார் இயக்குனர்.
குறை
கதாபாத்திரங்களை சரியாக எழுதிவிட்டு, அவர்களுக்கான அழுத்தமான காட்சிகள், மைய கதைக்குத் தேவையான திரைக்கதை ஆகியவற்றை அமைக்கத் தவறியிருக்கிறார். அவற்றை சரி செய்திருந்தால் ஒரு நல்ல த்ரில்லர் படத்தைப் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்.
கருத்துரை
டேனி - மிதமான பாய்ச்சல்