இயக்கம் - விருமாண்டி
இசை - ஜிப்ரான்
நடிப்பு - விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்
ரேட்டிங் - 3.5/5
கதை
இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் கிராமத்து இளைஞர் விஜய் சேதுபதி. ஊரின் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் மக்களை ஒன்று திரட்டி அவர்களது பிரச்சினைகளுக்காகப் போராடுப்வர். அவருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. விஜய் சேதுபதியின் குடும்பமும் ஏழ்மையான குடும்பம்தான். நமக்காக ஒரு சொந்த வீடாவது கட்ட வேண்டும். அதற்காக வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று சம்பாதிக்கலாமே என கணவனுக்கு யோசனை சொல்கிறார் மனைவி ஐஸ்வர்யா. மனைவியின் வேண்டுகோளை ஏற்று விஜய் சேதுபதியும் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்கிறார். நன்றாக சம்பாதித்து குடும்பத்திற்கு பணம் அனுப்பிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஒரு விபத்தில் இறந்து போகிறார் விஜய் சேதுபதி. அவருடைய உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர இயலாத நிலை வருகிறது. கணவர் உடலை எப்படியாவது கொண்டு வர வேண்டும் என அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார் ஐஸ்வர்யா. ஆனால், அது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. பத்து மாதங்களாகப் போராடுகிறார். கடைசியில் கணவர் உடலைக் கொண்டு வந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
நடிப்பு
‘க.பெ.ரணசிங்கம்’ என கதாநாயகனின் கதாபாத்திரப் பெயர் படத்திற்குத் தலைப்பாக இருந்தாலும் ‘அரியாநாச்சி’ என்ற கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா தான் படத்தை முழுமையாகத் தாங்குகிறார். ஒரு கிராமத்து இளம் பெண் எப்படி இருப்பார், திருமணமான பின் அவரது குடும்பத்தின் மீது எவ்வளவு அக்கறையுடன் இருப்பார் என்பதை அப்படியே அச்சு அசலாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஐஸ்வர்யா. கணவர் உடலைக் கொண்டு வரத் துடிக்கும் பாசமான மனைவியாக நம்மை நெகிழ வைக்கும் அளவிற்கு நடித்திருக்கிறார். ஐஸ்வர்யாவின் திரையுலகப் பயணத்தில் இந்த ‘அரியாநாச்சி’ கதாபாத்திரம் ஒரு அற்புதமான கதாபாத்திரமாக காலத்திற்கும் பெயர் சொல்லும்.
இந்தக் காலத்தில் ஒவ்வொரு ஊருக்கும் தேவையான ஒரு இளைஞர் கதாபாத்திரம்தான் ‘ரணசிங்கம்’ கதாபாத்திரம். சமூக அக்கறையுடன் நிஜ வாழ்க்கையிலும் குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி அந்தத் திரைக்கதாபாத்திரத்திற்கு நன்றாக உயிர் கொடுத்திருக்கிறார். வழக்கம் போல அவருடைய இயல்பான நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது.
கலெக்டர் கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே, இப்ப சமூக அக்கறையுள்ள படத்தில் நிஜ வாழ்க்கையில் வலதுசாரி குணம் கொண்ட ஒரு மனிதரை எதற்காக நடிக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை. விஜய் சேதுபதியின் தங்கையாக பவானி. தமிழ் சினிமாவிற்கு புதிய சகோதரி நடிகை கிடைத்திருக்கிறார்.
இசை, மற்றவை
ஜிப்ரான் இசையில் உயிரோட்டமான காட்சிகளுக்குப் பின்னணி இசை மேலும் உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளது. என்கே. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு அந்த உயிரோட்டத்துடனேயே பயணிக்கிறது.
நிறை
இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு கதை. மக்களின் முக்கியப் பிரச்சினையான தண்ணீர் பிரச்சினையையும் கையில் எடுத்திருக்கிறார்கள். அரசு அலுவலகங்களில் ஒரு வேலை நடப்பதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பதை மிகவும் விளக்கமாகக் காட்டியிருக்கிறார்கள். இந்தக் காலத்திலும் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் ஒரு சில இயக்குனர்களின் வரிசையில் இப்படத்தின் இயக்குனர் விருமாண்டியும் இடம் பெறுவார்.
குறை
படத்தின் நீளம்தான் முக்கியமான குறையாகத் தெரிகிறது. ஐஸ்வர்யா அவராகவே சென்னை, டெல்லி பயணிப்பது ஒரு இயல்பான படத்தில் செயற்கைத்தனமான காட்சியாகத் தெரிகிறது. சொல்லி வைத்தாற் போல் அங்கு அவருக்கு ஒரு சிலர் தானாகவே வந்து உதவி செய்வதும் நம்பும்படியாக இல்லை. மேலும், பத்து மாதங்களாக அவரது குழந்தை வளராமல் அப்படியே இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
கருத்துரை
க.பெ.ரணசிங்கம் - க.பா. (கண்டிப்பாகப் பார்க்கவும்)