தயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட், சிக்யா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - சுதா கோங்கரா
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிப்பு - சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி
வெளியான தேதி - 12 நவம்பர் 2020
நேரம் - 2 மணி நேரம் 29 நிமிடம்
Rating - 4/5
தமிழ் சினிமாவில் இந்த 2020ம் வருடத்தில் ஒரு நல்ல படத்தைக் கூட இன்னும் பார்க்கவில்லையே என்ற ஏக்கத்தை நீக்கியிருக்கிறது இந்த ‘சூரரைப் போற்று’.
ஒவ்வொரு வருடத்திலும் குறைந்தபட்சம் ஒரு சில நல்ல படங்களையாவது பார்த்துவிட முடியும். ஆனால், இந்த 2020ம் வருடத்தில் கொரானோ தொற்று காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் கடந்த எட்டு மாதங்களாக புதிய படங்கள் வெளியாகவில்லை.
ஓடிடி தளங்களில் சில படங்கள் வெளிவந்தாலும் அவை ரசிகர்களுக்கு முழு மனநிறைவைத் தரவில்லை. அவற்றையெல்லாம் இந்த ஒரே ஒரு ‘சூரரைப் போற்று’ முற்றிலுமாக நிறைவேற்றிவிட்டது.
இந்திய பயணிகள் விமான சேவையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஒரு ஆசிரியரின் மகனாக இருந்தவர் எப்படி இந்தியாவில் பயணிகளுக்காக ஒரு விமான நிறுவனத்தை ஆரம்பித்து சாதித்தார் என்பதை இந்தப் படம் மூலம் உணர்வு பூர்வமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுதா.
மதுரை அருகில் உள்ள சோழவந்தான் ஊரில் வசிக்கும் ஆசிரியரின் மகன் சூர்யா. இளம் வயதிலேயே எதையாவது சாதிக்க வேண்டும் என்று துடிப்பவர். பணக்காரர்கள் மட்டுமே பயணித்து வந்த விமானத்தில் ஏழை மக்களும் பயணிக்க வேண்டும் என்ற கனவு காண்பவர். விமானப் படையில் சேர்ந்து பின் அந்த வேலையை விட்டு விமானக் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்ற தன் லட்சியத்தில் இறங்குகிறார். அவருக்குத் துணையாக மனைவி அபர்ணா பாலமுரளி மற்றும் இரு நண்பர்களும் இருக்க தன் லட்சியத்தை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், அதற்காக அவர் பல தடைகளை, சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அவற்றை மீறி அவர் ஏழைகளையும் விமானத்தில் பறக்க வைத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படம் முழுவதுமே ஒன்றுக்கொன்று தொடர்ச்சியான உணர்வுபூர்வமான காட்சிகளாக இருந்தாலும் இரண்டு காட்சிகளைப் பார்த்துக் கண் கலங்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
தன் அப்பா ஊரில் இறந்துவிட, வெளியூரில் விமானப் படையில் வேலை பார்க்கும் சூர்யா உடனடியாக ஊர் திரும்ப விமான நிலையத்திற்குச் செல்கிறார். அவரிடம் வெறும் 6000 ரூபாய் மட்டுமே இருக்க, விமானப் பயணத்திற்கோ 12000 ரூபாய் தேவைப்படுகிறது. மீதிப் பணத்தைப் பெற அங்கு காத்திருப்பவர்களிடம் தன் நிலைமையைச் சொல்லி கையேந்தி பணம் கேட்கிறார்.
ரயில், லாரி, டூ வீலர் பயணம் என பயணித்து அப்பாவின் இறுதிச் சடங்கு முடிந்த பின்னே அவரால் ஊருக்கு வந்து சேர முடிகிறது. அப்பாவிற்கு இறுதிக் கடமைகளைக் கூட செய்ய வராத மகனைப் பார்த்து அம்மா ஊர்வசி கோபத்துடன் அழுது கொண்டே கேட்க, அதற்கு பதிலளித்து சூர்யா அழும் காட்சி என அடுத்தடுத்து இந்த காட்சிகளில் சூர்யாவின் நடிப்பும், ஊர்வசியின் நடிப்பும் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் கண்ணீரில் நனைய வைத்துவிடும். படம் முழுவதும் சூர்யா எப்படி நடித்திருப்பார் என்பதற்கு இந்த இரண்டு காட்சிகளே போதும்.
எந்த அரசியலும் பார்க்காமல் இருந்தால் இந்த வருடத்திற்கான தேசிய விருதை இப்போதே சூர்யா பெயரில் எழுதி வைத்துவிடுங்கள்.
இந்தப் படம் ஆரம்பிக்கும் போது சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளியா, யார் அவர் எனக் கேட்டவர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அபர்ணாவை ‘பொம்மி, பொம்மி’ எனக் கொண்டாடுவார்கள். கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமானவர்கள்தான் ஒரு படத்துக்குத் தேவை என்பதை அபர்ணா தன் நடிப்பின் மூலம் உணர்த்தியிருக்கிறார். பொம்மி போல ஒரு மனைவி கிடைத்தால் பல கணவர்கள் இந்த நாட்டின் சாதனையாளர்களாக இருப்பார்கள்.
சூர்யா, அபர்ணா மட்டுமல்ல படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள், ஏன் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் கூட அவரவர் கதாபாத்திரங்களில் பேசப்படுகிறார்கள்.
படத்தின் வில்லன் பரேஷ் ராவல், அம்மா ஊர்வசி, சூர்யாவின் விமானப்படை மேலதிகாரி மோகன் பாபு, நண்பர்கள் காளி வெங்கட், விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் ஆகியோர் மட்டுமல்ல சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சூர்யாவின் அப்பா பூ ராமு, பொம்மி அப்பா ஞானசம்பந்தம், சித்தப்பா கருணாஸ், டிஜிசிஎ அதிகாரி அச்யுத் குமார், ரேடியோ நிருபர் வினோதினி, சூர்யாவுக்கு முதல் வாய்ப்பு தந்து ஏமாற்றிய பிரகாஷ் பெலவாட் என அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாய், நிறைவாய் நடித்துள்ளார்கள்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ‘காட்டுப பயலே…, உசுரே…’ பாடல்கள் உருக்குகிறது. பின்னணி இசையில் காட்சிகளின் உணர்வுகளை தன் இசையால் மேலும் மெருகூட்டியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் நிகேத், படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா, ஆர்ட் டைரக்டர் ஜாக்கி, வசனகர்த்தா விஜய்குமார், காஸ்டியும் டிசைனர் பூர்ணிமா ராமசாமி என தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கும் இந்த சூரருக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது.
படத்தில் குறைகளே இல்லையா என சிலர் கேட்கலாம். இது வழக்கமான சினிமா அல்ல. ஒருவரின் வாழ்க்கை சாதனை, யாரும் நினைத்தால் சாதிக்கலாம் என்ற உத்வேகத்தைக் கொடுக்கும் ஒரு படம். ஓரிரு குறைகள் இருந்தால் என்ன மற்ற சாதனைகளுக்கு முன்பு அந்தக் குறைகள் பெரிதல்ல.
சூரரைப் போற்று - ஆகாச சூரன்...