தயாரிப்பு - மசாலா பிக்ஸ்
இயக்கம் - ஆர்.கண்ணன்
இசை - ரதன்
நடிப்பு - சந்தானம், தாரா அலிஷா, ஸ்வாதி முப்பலா
வெளியான தேதி - 14 நவம்பர் 2020
நேரம் - 1 மணி நேரம் 46 நிமிடங்கள்
Rating - 3/5

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே எட்டு மாதங்களாக முடங்கிக் கிடந்தது. தியேட்டர்களைத் திறந்தால் மக்கள் வருவார்களா மாட்டார்களா என்ற சந்தேகமும் இருந்தது. பொழுதுபோக்கிற்காக தியேட்டர்களுக்கு வரும் மக்களை இந்தக் கொரானோ தொற்று காலத்தில் மீண்டும் வரவைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. அதை சந்தானம் நாயகனாக நடித்துள்ள ‘பிஸ்கோத்’ படம் செவ்வனே செய்திருக்கிறது. தியேட்டர்களுக்கு வந்து மக்கள் சிரித்துவிட்டு செல்லும் அளவிற்கு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கண்ணன்.

சிறு வயதிலிருந்தே அப்பா தொழிலான பிஸ்கட் தயாரிப்பில் ஐடியாக்களை அள்ளிக் கொடுப்பவர் சந்தானம். அப்பா இறந்துவிட அவரது பார்ட்னரான ஆனந்தராஜ் வளர்ந்து வரும் பிஸ்கட் கம்பெனியை தன்வசப்படுத்திக் கொள்கிறார். சந்தானம் ஒரு சூப்பர்வைசராகவே அக்கம்பெனியில் இருக்கிறார். கம்பெனியை மேலும் உயர்த்த ஐடியா கொடுத்தால் ஜெனரல் மேனேஜர் ஆக வாய்ப்பு தருகிறேன் என சந்தானத்திடம் சொல்கிறார் ஆனந்தராஜ். சந்தானம் ஜி.எம் ஆக மாறுகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சந்தானம் என்றாலே ஒன் லைன், ஒன் வேர்டு பன்ச்கள் வருவது வழக்கம். இந்தப் படத்தில் பல இடங்களில் அவை வந்து ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. சந்தானம், ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் ஆகியோர்தான் கம்பெனியில் உள்ள கூட்டாளிகள். இவர்களது கூட்டணி ரசிகர்களை நிச்சயம் சிரிக்க வைக்கும். படத்தின் நாயகிகளாக தாரா அலிஷா, ஸ்வாதி முப்பலா. இருவரில் ஒருவர் நண்பர், இன்னொருவர் காதலி.  ஆனந்தராஜ் கதாபாத்திரத்தை நல்லவரா, கெட்டவரா என்றுதான் கேட்க வேண்டும். சந்தானத்தை வளரவிடாமல் தடுப்பவராக பரத் ரெட்டி. வயதான காலத்திலும் தன் நடிப்பில் தனி முத்திரை பதிக்கிறார் சௌகார் ஜானகி.

இந்தக் காலத்திய கதையாக செல்லும் படத்தில் சௌகார் ஜானகி சொல்லும் கதையாக சில படங்களின் ஸ்பூஃப் இடம் பெற்றுள்ளது. அதில் ‘பாகுபலி’ பற்றிய ஸ்பூஃப் ரசிகர்களை அதிகம் சிரிக்க வைக்கும். 80களின் ‘ரெட்ரோ’ கூட ஓகே. ஆனால், அந்த ‘300’ ப்ட ஸ்பூப் தான் கொஞ்சம் போரடிக்கிறது.

சந்தானம் படத்திற்குப் போனால் அவர் சிரிக்க வைக்கிறாரா இல்லையா என்று மட்டும்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். அது இந்தப் படத்தில் நிறைவாகவே இருக்கிறது. 

முதியோர் இல்லத்திற்கு உதவி, பாரம்பரிய சிறு தானியங்களுடன் பிஸ்கட் தயாரிப்பு என காமெடி படத்தில் சில நல்ல விஷயங்களும் இடம் பெற்றுள்ளன.

இரண்டு மணி நேரம் கவலைகளை மறந்து லாஜிக் பார்க்காமல் சிரித்து ரசிக்கலாம்.  

பிஸ்கோத் - அனைவரும் சுவைக்கலாம்...