தயாரிப்பு - எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ்
இயக்கம் - லோகேஷ் கனகராஜ்
இசை - அனிருத்
நடிப்பு - விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்
Rating - 2.75/5

விஜய், விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடித்த படம். கடந்த ஒரு வருடமாக எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு படம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்களா, இல்லையா ?.

நாகர்கோவிலில் இருக்கும் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் படித்து வெளியில் வந்தவர் விஜய் சேதுபதி. பல சட்ட விரோத செயல்களைச் செய்ய அந்தப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு போதைப் பொருட்களைக் கொடுத்து செய்ய வைக்கிறார். அந்த சீர்திருத்தப் பள்ளிக்கு ஆசிரியராக வருபவர்களையும் விரட்டி அடிக்கிறார் விஜய் சேதுபதி. அப்படிப்பட்ட பள்ளிக்கு தன் கல்லூரிப் பேராசிரியர் வேலையிலிருந்து விலகி ஆசிரியராக வருகிறார் விஜய். அவர் சீர்திருத்தப் பள்ளி மாணவர்களை மாற்றி நல்வழிப்படுத்தினாரா, மாணவர்களின் இந்த நிலைக்குக் காரணமான விஜய் சேதுபதியை என்ன செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தில் விஜய், விஜய் சேதுபதி இருவருக்குமே சம பங்கு காட்சிகள் இருக்கின்றன. முதல் பாதியில் விஜய் படமாகவும், இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதி படமாகவும் இருக்கிறது. விஜய் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்கென்றே சில பல காட்சிகளை சரியான ஹீரோயிசத்துடன் வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தன் ரசிகர்களை எந்த ஒரு காட்சியிலும் ஏமாற்றவில்லை விஜய். ஆனாலும், பகல் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவரை முழு குடிகாரராகக் காட்டுவது சரியல்ல. அவருக்கு பல சிறுவர், சிறுமியர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதையெல்லாம் மனதில் வைத்து தனது கதாபாத்திரத் தேர்வில் விஜய் கவனமாக இருக்க வேண்டும்.

படத்திற்காக வெளிவந்த போஸ்டர்கள் சிலவற்றில், விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதிக் கொள்வது போல பல இருந்தன. ஆனால், அவர்கள் இருவரும் நேருக்கு நேராக மோதிக் கொள்வது கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும்தான் என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். தனது வில்லத்தனமான நடிப்பை அசால்ட்டாக செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. அலட்டிக் கொள்ளாத நடிப்பு, கொலைகளைச் செய்யும் போது கூட ஒரு நக்கல். அவர் அடித்தாலே அடி வாங்குபவருக்கு மரணம் நிச்சயம் என்பதெல்லாம் விஜய் நாயகனாக நடிக்கும் படத்தில் கொஞ்சம் ஓவர்தான்.

மாளவிகா மோகனனுக்கு படத்தின் ஆரம்பத்தில் இருந்தே விஜய்யைப் பற்றி ஒரு குழப்பத்திலேயே இருக்கிறார். படத்தில் வரும் போதெல்லாம் அதே குழப்பத்தில் இருப்பது போலவே மிரள்கிறார். ஆன்ட்ரியா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றெல்லாம் ஒரு பில்ட்அப் கொடுத்திருந்தார்கள். ஆனால், அவரே இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வருகிறார். திடீரென கிளைமாக்சில் வந்து அம்பு எய்து சாகசம் புரிகிறார். சாந்தனு, கௌரி கிஷன், நாசர், அர்ஜூன்தாஸ், மகேந்திரன் என பல நடிகர்கள், நடிகைகள் படத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி விட்டு, இரண்டாம் பாதியில் விஜய் கூடவே வந்து ரசிக்க வைக்கிறார் சூப்பர் சிங்கர் பூவையார்.

அனிருத் இசையமைப்பில் கடந்த வருடத்திலேயே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. சத்யன் சூர்யன் கதைக்குண்டான விதத்தில் லைட்டிங்கையும் ஒளிப்பதிவையும் அமைத்திருக்கிறார். 

படத்தின் நீளம் ரொம்பவே அதிகம். ஆரம்பத்தில் விஜய் சம்பந்தப்பட்ட கல்லூரி காட்சிகளை தாராளமாக வெட்டித் தள்ளலாம். அதே போல, படத்தின் வில்லனான விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக்கிலிருந்து படத்தை ஆரம்பித்திருப்பது ஏன் எனத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக விஜய்க்கு ஒரு பிளாஷ் பேக் வைத்து அவர் மீது ஒரு அனுதாபம் வரும் அளவிற்கு காட்சிகளை வைத்திருக்கலாம். 

தன் முந்தைய படங்களான ‘மாநகரம், கைதி’ ஆகியவற்றில் காட்சிக்குக் காட்சி திரைக்கதையில் ஒரு விறுவிறுப்பைச் சேர்த்திருப்பார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அது இந்தப் படத்தில் இல்லவே இல்லை. அடுத்து இப்படித்தான் கதை நகரப் போகிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. 

விஜய் நாயகனாக நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியதால் வித்தியாசமான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால், இது விஜய் படமா, விஜய் சேதுபதி படமா அல்லது லோகேஷ் கனகராஜ் படமா என ரசிகர்களுக்கு நிறையவே குழப்பம் வரும்.

மாஸ்டர் - 55/100