தயாரிப்பு - கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
இயக்கம் - பிரதீப் கிருஷ்ணமூர்த்தி 
இசை - சைமன் கே கிங் 
நடிப்பு - சிபி சத்யராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்
வெளியான தேதி - 28 ஜனவரி 2021
ரேட்டிங் - 3/5

கன்னடத்தில் வெளிவந்த ‘காவலுதாரி’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘கபடதாரி’. ஒரிஜனல் படத்தின் கதையைச் சிதைக்காமல் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

டிராபிக் போலீஸ் ஆக இருக்கும் சிபிராஜ் க்ரைம் போலீஸ் ஆக மாற வேண்டும் என்ற தீவிர ஆசையில் இருக்கிறார். அவருடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் மெட்ரோ பணி நடக்கும் இடத்தில் மூன்று எலும்புக் கூடுகள் கிடைக்கிறது. அது கொலை செய்யப்பட்டவர்களின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் என சந்தேகிக்கிறார் சிபிராஜ். மேலதிகாரிகளின் கட்டுப்பாட்டையும் மீறி அது பற்றிய விசாரணையை ஆரம்பிக்கிறார். பகலில் டிராபிக் போலீஸ் வேலை பார்த்துவிட்டு, இரவில் எலும்புக் கூடுகள் வழக்கை விசாரிக்கிறார். விசாரணையில் முன்னாள் இன்ஸ்பெக்டர் நாசர், பத்திரிகை ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் ஆகியோருடைய உதவி அவருக்குக் கிடைக்கிறது. அவர்கள் உதவியுடன் அந்த எலும்புக் கூடுகள் பற்றிய உண்மையை அவர் கண்டறிகிறாரா இல்லையா என்பதுதான் ‘கபடதாரி’.

டிராபிக் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சக்தியாக சிபிராஜ். அவருக்கென்றே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் போல இருக்கிறது. அப்படியே அழகாகப் பொருந்திப் போகிறார். சினிமா போலீஸ் என்றாலே ஆவேசமாகக் காட்டுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் அப்படியெல்லாம் இல்லை. ஒரு யதார்த்தமான போலீஸ் எப்படி இருப்பாரோ அப்படியான கதாபாத்திரம். அதில் எல்லை மீறாமல் நடித்திருக்கிறார் சிபிராஜ்.

சிபிக்கு உதவும் முன்னாள் இன்ஸ்பெக்டராக நாசர், அவருடைய நடிப்பில் அனுபவம் பேசுகிறது. பத்திரிகை ஆசிரியராக ஜெயப்பிரகாஷ். அவர் பேசும் தமிழ்தான் அவருடைய கதாபாத்திரத்தைக் கொஞ்சம் கெடுத்துவிட்டது. சாதாரணமாகவே அவரைப் பேச விட்டிருக்கலாம். கொஞ்சம் சென்னைத் தமிழ் கலந்த பேச்சு தேவையே இல்லாதது.

நந்திதா ஸ்வேதாவுக்கு அதிக வேலை இல்லை. அப்பா ஜெயப்பிரகாஷ் நிலையைப் பார்த்து கவலைப்படும் காட்சிகளும் வசனம்களும்தான் அவருக்கு உள்ளது.

சைமன் கே கிங் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். 

படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இடைவேளைக்குப் பின் பல திருப்பங்களுடன் நகர்கிறது. எதிர்பாராத ஒருவர்தான் குற்றவாளி என்பதில் பரபரப்பு ஏற்படவே இல்லை. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரைப் பார்த்தால் நமக்கு மிரட்சியும் வரவில்லை. இருந்தாலும் போராடிக்காமல் நகர்கிறது படம்.

கபடதாரி - கண்ணிய காவலன்