தயாரிப்பு - த்ரி இஸ் எ கம்பெனி புரொடக்ஷன்
இயக்கம் - கோபி
இசை - ஹிதேஷ் மஞ்சுநாத்
நடிப்பு - தினேஷ், தீப்தி
ரேட்டிங் - 2.25/5

அறிமுக இயக்குனர் கோபி இளம் ரசிகர்களை மனதில் வைத்து இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

90ஸ் கிட்ஸ்களில் ஒருவரான டாட்டூ போடும் தினேஷுக்கு தீப்தி மீது காதல். தன் காதலை சொல்ல முயலும் சமயத்தில் ஒரு முத்த சம்பவம் காரணமாக இருவரும் பிரிகிறார்கள். தீப்தி லண்டனுக்கு வேலைக்குச் சென்று விடுகிறார். அங்கும் காதலியைத் தேடிச் செல்கிறார். தினேஷால் தீப்திக்கு வேலை போய்விட, இந்தியா திரும்புகிறார். தொடர்ந்து தொந்தரவு செய்யும் தினேஷிடமிருந்து தப்பிக்க திருமணமாகாத எந்தப் பெண்ணும் செய்யத் துணியாத ஒரு விஷயத்தைச் செய்கிறார். அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தினேஷ், வழக்கம் போய் வார்த்தைகளை மென்று துப்புகிறார். பார்க்கும் நமக்குத்தான் பல சமயங்களில் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை. தீப்தி அழகாக இருக்கிறார், கொஞ்சமாக நடிக்கிறார். கடைசியில் அவர் எடுக்கும் முடிவு முற்றிலும் சினிமாத்தனமானது. தினேஷ் நண்பர்களாக தொன, தொனவென்று பேசிக் கொண்டேயிருக்கும் மூவர், பொறுமையைச் சோதிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ரமா ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.

இயக்குனர் கொஞ்சம் ஆர்வக் கோளாறில் எடுத்த படம் போல இருக்கிறது. பல காட்சிகள் சினிமாத்தனமாக உள்ளன. கதையாக புதிதாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அதற்காக தேர்வு செய்த நட்சத்திரங்கள் படத்தை முடிந்தவரையில் கெடுத்திருக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு எல்லாமே சுமார் ரகம்தான்.

‘நானும் சிங்கிள்தான்’ என 90ஸ் கிட்ஸ் பற்றிய கருவை எடுத்துக் கொண்டு வாட்சப், பேஸ்புக்கைப் பார்த்திருந்தாலே இன்னும் கலகலப்பான ஒரு படத்தைக் கொடுத்திருக்க முடியும்.