தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - கௌதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி
இசை - கார்த்திக், மது, பிரேம்ஜி அமரன், எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
நடிப்பு - கௌதம் மேனன், விஜய் சேதுபதி, அமிதாஷ், வருண், அமலா பால், மேகா ஆகாஷ்
ரேட்டிங் - 3/5

ஒரே படத்தில் நான்கு குறும் படங்களைக் கொண்ட ஆந்தாலஜி வகைப் படம் இது.

கௌதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன்குமாரசாமி ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்கியுள்ளார்கள்.

எதிர்பாரா முத்தம்

இயக்கம் - கௌதம் மேனன்
இசை - கார்த்திக்
நடிப்பு - கௌதம் மேனன், அமலா பால், வினோத் கிஷன், ரோபோ சங்கர்

கல்லூரியில் படிக்கும் போது அமலா பாலுடன் நட்பாகப் பழகும் கௌதம் மேனன் பல வருடம் கழித்து தன் நண்பர்களுடன் மீண்டும் அந்த பழைய நட்பைப் பற்றிப் பேசுகிறார். அதன்பின் அமலா பால் ஒரு நாள் கௌதம் மேனனை வந்து சந்திக்கிறார். அப்போது அமலா பால் அந்த இளமைக் காலத்தில் இருந்தது நட்பா, காதலா என்பதைப் பற்றிக் கேள்வி கேட்கிறார். அதன் முடிவு என்ன என்பதுதான் இதன் கதை.

கௌதம் மேனன், இளம் வயது கௌதம் மேனனாக நடித்துள்ள  வினோத் கிஷன், அமலா பால் மூவருமே அவரவர் கதாபாத்திரங்களில் மிக இயல்பாய் நடித்துள்ளார்கள். இக்கதையின் முடிவு மிகவும் யதார்த்தமான ஒன்று.

அவனும் நானும்

இயக்கம் - விஜய்
இசை - மது
நடிப்பு - அமிதாஷ் பிரதான், மேகா ஆகாஷ்

காலதன் அமிதாஷ் உடன் ‘நெருக்கமாகப்’ பழகிய காரணத்தால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடைகிறார் மேகா ஆகாஷ். அமிதாஷ் விபத்தில் இறந்து விட, கருவை அழிக்காமல் காப்பாற்றி குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால், பிறந்த அந்தக் குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடுகிறார் மேகாவின் தோழி. அதன்பின் என்ன என்பதுதான் மீதிக் கதை.

சினிமாத்தனமான கிளைமாக்சாக முடித்திருப்பதுதான் இக்கதையைக் கொஞ்சம் பலவீனப்படுத்துகிறது. மேகாவுக்குத்தான் இக்கதையில் பிரதான பாத்திரம். அதில் இயல்பாக நடித்திருக்கிறார். 

லோகம்

இயக்கம் - வெங்கட் பிரபு
இசை - பிரேம்ஜி அமரன்
நடிப்பு - வருண், சங்கீதா, சாக்ஷி அகர்வால், லுத்புதீன்

ஒரு வீடியோ கேமிலேயே முக்கால்வாசிக் கதையை அனிமேஷனிலேயே சொல்லி முடித்திருக்கிறார்கள். அந்தப் புதுமை ரசிக்க வைத்தாலும் மற்ற கதைகளைக் காட்டிலும் உணர்வுபூர்வமாய் இல்லாமல் போய்விட்டது. தன் காதலைப் பற்றியும், காதலியைப் பற்றியும் வருண் சொல்லும் போது இருக்கும் உருக்கம், முழு கதையில் இல்லை. 

இக்கதையில் வருண் தான் பிரதான கதாபாத்திரம். அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு அவர் கொடுத்திருக்கும் குரல் சுவாரசியமாய் உள்ளது. வருண் காதலிப்பது யார் என்ற சஸ்பென்ஸை கடைசி வரை கொண்டு போய் இருக்கிறார்கள். ஆனால், அப்படி முடித்திருக்க வேண்டுமா என கேள்வி கேட்க வைத்துவிட்டது.

ஆடல் பாடல்

இயக்கம் - நலன் குமாரசாமி
இசை - எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
நடிப்பு - விஜய் சேதுபதி, அதிதி பாலன்

ஒரு வீட்டிற்குள்ளேயே நகரும் கதையை, இந்த அளவிற்கு உணர்வு பூர்வமாக சொல்ல முடியுமா என யோசிக்க வைத்துவிட்டார் இயக்குனர் நலன் குமாரசாமி. கணவனின் ‘கள்ளக் காதலை’க் கண்டுபிடித்து அவனுக்கு மனைவி தக்க பாடம் புகட்டுவதுதான் இதன் கதை. 

விஜய் சேதுபதி, அதிதி பாலன் இருவரில் யார் நடிப்பு சிறப்பு என பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவிற்கு இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். நிஜ கணவன் மனைவி கூட இந்த அளவிற்கு இருப்பார்களா என்று சொல்லுமளவிற்கு அவர்கள் நடித்துள்ளார்களா வாழ்ந்துள்ளார்களா என கேட்க வைத்திருக்கிறது. 

இந்த ஆந்தாலஜியை உருவாக்கியவர்களுக்கே இந்த ‘ஆடல் பாடல்’ தான் நான்கிலும் சிறந்தது என்பது புரிந்திருக்கிறது. அதனால்தான் படத்தின் கடைசியில் இந்தக் கதையை வைத்திருக்கிறார்கள்.