வீரவணக்கம் - விமர்சனம்
29 Aug 2025
கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய புரட்சி வீரருமான பி. கிருஷ்ண பிள்ளையின் வீரம் மிகுந்த வாழ்க்கையையும், கேரளாவும் தமிழகமும் பகிர்ந்து கொள்ளும் அரசியல், சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் உள்ள ஒற்றுமைகளையும் உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கிறது இப்படம்.
தமிழகத்தின் செல்வந்த கிராமத்தைச் சேர்ந்த பரத், கம்யூனிச சித்தாந்தத்தை தழுவி, சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கடந்து மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்கிறார். ஊர் மக்களுக்கு உதவி செய்வதோடு, அருகிலுள்ள கிராமத்தில் சாதி வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக நின்று, அவர்களைப் போராட்டத்துக்கு தயார்படுத்த கேரளாவுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு, 96 வயதான புரட்சிப் பாடகி பி.கே. மேதினி, பி. கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாறு மற்றும் கேரளாவில் கம்யூனிச புரட்சியின் எழுச்சியை விவரிக்கிறார். இதுவே ‘வீரவணக்கம்’ படத்தின் மையக் கரு.
1940 முதல் 1946 வரையிலான காலகட்டத்தில் நடக்கும் இக்கதை, வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டங்கள் ஒருபுறம் நடந்தாலும், இந்திய கிராமங்களில் ஜமீன்களால் அடிமைப்படுத்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை விடுவித்து, கம்யூனிசம் மக்கள் புரட்சியை எவ்வாறு உருவாக்கியது என்பதை எதார்த்தமாகவும், ஆழமாகவும் சித்தரிக்கிறது. இயக்குநர் அனில் வி. நாகேந்திரன், இந்த வரலாற்று நிகழ்வுகளை உணர்ச்சிகரமாகவும், நேர்மையாகவும் பதிவு செய்திருக்கிறார்.
பி. கிருஷ்ண பிள்ளையாக சமுத்திரக்கனி, தனது உணர்வுப்பூர்வமான வசன உச்சரிப்பு மற்றும் ஆக்ரோஷமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். மக்களுக்காக தியாகம் செய்த தலைவர்களின் உணர்வுகளை பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கிறார். பரத்தாக நடித்திருக்கும் பரத், கம்பீரமான தோற்றத்துடன், வயதுக்கு மீறிய பாத்திரத்தையும் திறம்பட கையாண்டிருக்கிறார். குறிப்பாக, கிளைமாக்ஸில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான அவரது வசனங்கள், சமூகத்தில் புரையோடிப்போன பொய் பிரச்சாரங்களுக்கு எதிராக சக்திவாய்ந்த அறைகூவலாக அமைந்திருக்கிறது.
ரித்தேஷ் (கம்யூனிஸ்ட் போராளி), பிரேம் குமார் (போலீஸ் இன்ஸ்பெக்டர்), ரமேஷ் பிஷரோடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினியாக நடித்தவர், அதர்ஷ், ஆய்ஷ்விகா ஆகியோர் தங்கள் பாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கதையை மேலும் உயர்த்தியிருக்கின்றனர்.
கவியரசுவின் ஒளிப்பதிவு பிரமாண்டமாக இல்லாவிட்டாலும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை பார்வையாளர்களுக்கு கடத்தும் வகையில் காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறது. எம்.கே. அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி. ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே. குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையின் ஆழத்திற்கு உயிரூட்டுகின்றன.
இயக்குநர் அனில் வி. நாகேந்திரன், பி. கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கையை ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பாக மாற்றியிருக்கிறார். பிரமாண்டமான காட்சியமைப்புகள் இல்லை என்றாலும், ஒரு புரட்சித் தலைவரின் வாழ்க்கையைப் புத்தகம் படிப்பது போன்ற அனுபவத்தை இப்படம் வழங்குகிறது. “போராட்டமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு” என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து, சமூக மாற்றத்திற்கு வித்திடும் இப்படம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைப்பாக விளங்குகிறது.
‘வீரவணக்கம்’ ஒரு புரட்சிகர தலைவரின் வாழ்க்கையை உணர்ச்சிகரமாகவும், உண்மையாகவும் சொல்லும் திரைப்படம். சமூகநீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றைப் பேசும் இப்படம், பார்வையாளர்களுக்கு சிந்தனையைத் தூண்டும் ஒரு முக்கியமான படைப்பு.
Tags: veeravanakkam, samuthirakani
