வந்தா மல - விமர்சனம்

10 Aug 2015

மதுரை மண்ணைச் சுற்றித்தான் கடந்த சில வருடங்களாக பல தமிழ்ப் படங்கள் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது அது சென்னை மண்ணை நோக்கி திரும்பியுள்ளது. சென்னை என்றாலே வட சென்னையைத்தான் கதைக் களமாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தப் படமும் வட சென்னைப் பகுதிக் கதைதான். நட்பு, காதல் ஆகியவற்றைச் சுற்றி நகரும் கதை திடீரென தேசப் பற்றையும் நோக்கி நகர்ந்து எதிர்பார்க்காத ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. லோக்கலான ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் இகோர் நினைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தமிழ், உதயராஜ், பிரசாத், ஹிட்லர் நான்கு பேரும் நண்பர்கள். செயினை அறுப்பதுதான் இவர்களது தொழில். ஒன்றாகவே சேர்ந்து செயினைப் பறிக்கும் வேலைகளில் ஈடுபடுவார்கள். தமிழுக்கு அந்தப் பகுதியில் மாவு மிஷின் நடத்திக் கொண்டிருக்கும் பிரியங்கா மீது காதல். ஆனால் , பிரியங்காவுக்கு தமிழ் செய்யும் திருட்டுத் தொழில் பிடிக்கவே பிடிக்கவேது, உழைத்து வாழ வேண்டும் என்று சொல்வார். இதனிடையே ஆபத்தில் இருக்கும் தன்னைக் காப்பாற்றும்படியும், அப்படி செய்தால் இரணடு கோடி கிடைக்கம் என்றும் ஒருவர் எழுதி வைத்த சீட்டு நான்கு நண்பர்களிடமும் கிடைக்கிறது. அந்த சீட்டை எழுதி வைத்தவரை நான்கு நண்பர்களும் தேட ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் தேடியவர் கிடைத்தாரா, அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. படத்தில் தமிழ், உதயராஜ், பிரசாத், ஹிட்லர் நான்கு பேருக்குமே முக்கியத்துவம் உண்டு. நான்கு பேரையும் கதாநாயகர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமாத்தனமில்லாத முகத்துடன் நால்வரும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். நால்வரில் தமிழுக்கு மட்டுமே காதலி உண்டு. செயின் திருடர்களாக இருப்பவர்கள் நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கி ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறார்கள். ‘கங்காரு’ படத்தில் நாயகியாக நடித்த பிரியங்கா, அச்சு அசல் சென்னைப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். அவருடைய பேச்சும், குரலும் அந்த கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருத்தமாக அமைந்துள்ளது. காதலைனப் பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுக்க முயற்சித்து படம் பார்ப்பவர்களை ரொம்பவே சூடற்றுகிறார். தமிழ் சினிமா இப்படி ஒரு நாயகியை இதுவரை பார்த்திருக்காது. மற்ற நடிகர்களில் மகாநதி சங்கர் மட்டுமே முத்திரை பதிக்கிறார். சாம் டி ராஜ் இசையமைப்பில் அதிரடியான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக ‘ஆன்னா ஆவன்னா…’ பாடல் அதிகம் ரசிக்க வைக்கிறது. ‘வந்தா மல’ – முன் வரிசை ரசிகர்களுக்கு…  

Share via: