சகலகலா வல்லவன் - விமர்சனம்
02 Aug 2015
கலகலப்பான படங்களுக்குத்தான் இப்போது நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதைப் புரிந்து, இதற்கு முன் இயக்கிய ஆக்ஷன், காதல் படங்களிலிருந்து விலகி மீண்டும் ஒரு ‘கலகலப்பு’ ஆன படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுராஜ்.
சகலகலா வல்லவன் என்றால் அனைத்தும் அறிந்தவன் என்று பொருள். அப்பா டக்கர் ஆன ஜெயம் ரவிக்கும் விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்ட மனைவியை மட்டும் எப்படி அடக்குவது என்று தெரியவில்லை. மற்றபடி படத்தில் வேறு எதையும் பெரிதாகப் பார்க்காமல் விட்டால் இரண்டரை மணி நேரத்திற்கு தியேட்டரில் சிரித்துவிட்டு வரலாம்.
தென்காசிப் பட்டணத்தில் அப்பா பெயரைத் தட்டாமல் இருப்பவர் ஜெயம் ரவி. இவருக்கும் இவர்களுடைய எதிரி குடும்பத்தில் இருக்கும் அஞ்சலிக்கும் காதல் மலர்கிறது. ஆனால், அஞ்சலியின் முறை மாமனான சூரி இந்தக் காதலுக்கு எதிர்ப்பாக இருக்கிறார். அதையும் மீறி அஞ்சலியும் ஜெயம் ரவியைத் தீவிரமாகக் காதலிக்கிறார். இதனிடையே, ஜெயம் ரவியின் அத்தைப் பெண்ணான த்ரிஷாவின் திருமணம் திருமண மேடை வரை வந்து நின்று விடுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் அப்பா சொன்னதால் த்ரிஷாவின் கழுத்தில் தாலி கட்டுகிறார் ஜெயம் ரவி.
சிட்டியில் பிறந்து வளர்ந்த பெண்ணான த்ரிஷாவுக்கு, கிராமத்து இளைஞனான ஜெயம் ரவியைக் கண்டாலே பிடிக்கவில்லை. ஒரு மாதத்தில் விவாகரத்து கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையில் ஜெயம் ரவியின் வீட்டுக்கு வருகிறார் த்ரிஷா. அதன் பின் தேர்தல், மோதல், காதல் என பல திருப்பங்களைக் கடந்து முடிகிறது படம்.
ஒரு பக்கத்திற்குள் இந்தப் படத்தின் கதையைச் சொல்லிவிட முடியாது. அந்த அளவிற்கு கதையை நீட்டித்துக் கொண்டே போயிருக்கிறார் இயக்குனர் சுராஜ். அந்தக் குறையை கலகலப்பான காட்சிகள் மூலம் நிவர்த்தியும் செய்திருக்கிறார்.
ஜெயம் ரவியை இப்படி கிராமத்து இளைஞனாகப் பார்த்து நீண்ட நாட்களாகிறது. இந்தப் படத்திற்காக அவர் எதற்கு அஞ்சலியை சிபாரிசு செய்தார் என்பது படத்தைப் பார்த்தால்தான் புரிகிறது. அது என்ன என்பதை படத்தைப் பார்த்து நீங்களும் புரிந்து கொள்ளுங்கள். வழக்கம் போலவே காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார் ரவி, கூடவே காமெடியும் அவருக்கு நன்றாகவே வருகிறது.
அஞ்சலியா, த்ரிஷா இருவரில் யார் கவர்கிறார்கள் என்று கேட்டால் கிளாமர் ஏரியாவில் கலக்கி எடுத்திருக்கிறார் அஞ்சலி. அதிலும் ரவிக்கு அவர் நீச்சல் கற்றுக் கொடுக்கும் காட்சியும், அஞ்சலிக்கு ரவி சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் காட்சியும், அப்படி ஒரு நெருக்கமான காட்சிகள். ஆனால், பார்த்துக்குங்க அம்மணி…இப்படியே குண்டாகிட்டுப் போனீங்கனா, நமீதாவுக்கு நீங்கதான் போட்டின்னு சொல்லிடுவாங்க.
த்ரிஷா இடைவேளைக்குக் கொஞ்சம் முன்னர்தான் வருகிறார். மிகப் பெரிய முக்கியத்துவம் தரும் மாதிரியான கதாபாத்திரமாக இல்லையென்றாலும் ஆங்காங்கே தானும் இருக்கிறேன் எனக் காட்டிக் கொள்கிறார்.
ஜெயம் ரவிக்கு அடுத்து படத்தில் இரண்டாவது ஹீரோ போல படம் முழுவதுமே வருகிறார் சூரி. அவரின் அனைத்து நகைச்சுவைகளும் சொந்தச் சரக்காகவே இருக்கும் போலிருக்கிறது. கூட ஒரு குழுவை உருவாக்கி வைத்துக் கொண்டால் இன்னும் சில வருடங்களுக்கு தமிழ் சினிமா மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம். போட்டிக்கு யாருமே இல்லை என்பதை அவர் உணர்ந்தால் சரி.
‘நான் கடவுள்’ ராஜேந்திரனையும் முழு நீள காமெடியனாக்கிவிட்டார்கள். அவரும் தன் பங்கிற்கு கலகலப்பாக சிரிக்க வைக்கிறார்.
பிரபு, ராதாரவி, ரேகா என மற்றும் பலரில் நடிப்பவர்களுக்குப் படத்தில் சில காட்சிகளே கொடுக்கப்பட்டுள்ளன.
தமன் இசையில் ‘அக்கட தெலுங்கு’ தேசத்தில் இருந்து சில பாடல்களை அப்படியே போட்டிருக்கிறார். யுகே செந்தில் குமாரின் ஒளிப்பதிவில் கிராமத்து வளைவு, நெளிவுகளும், மற்றவைகளும் அழகாகப் படம்
பிடிக்கப்பட்டுள்ளன.
‘சகலகலா வல்லவன்’ - கலகலகலகல வல்லவன்…
Tags: sakalakala vallavan