இது என்ன மாயம் - விமர்சனம்

02 Aug 2015
காதல் என்பது ஒரு வகையான மாயமான விஷயம்தான். எப்போது யார் மீது அந்த ‘மேஜிக்’ தோன்றும் என்பதை நாமும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட ஒரு மாயமான காதலை மயக்கும் அளவிற்கு இயக்குனர் விஜய் கொடுப்பார் என்று எதிர்பார்த்தால் கொஞ்சம் மயக்கம் வரும் அளவிற்குத்தான் கொடுத்திருக்கிறார். அழகான ஒரு கதை, 5 வருடங்களுக்கு முன் கல்லூரியில் படித்த போது ஜுனியர் மாணவியான கீர்த்தி சுரேஷைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் விக்ரம் பிரபு. அந்தக் காதலை அவரிடம் தெரிவிக்க முயலும் போது கீர்த்தி தன்னிடம் நெருக்கமாகப் பழகியது காதலுக்காக அல்ல என்பது தெரிய வருகிறது. எனவே, அந்தக் காதலைச் சொல்லாமலேஅவரை விட்டுப் பிரிகிறார். 5 வருடங்கள் கழித்து சென்னையில் நண்பர்களுடன் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதை ஒரு தொழிலாக நடத்தும் விக்ரம் பிரபுவைத் தேடி, தன் காதலுக்கு உதவுமாறு தொழிலதிபரான நவ்தீப் வருகிறார். அவர் சொல்லும் காதலி விக்ரம் பிரபுவின் முன்னாள் காதலியான கீர்த்தி சுரேஷ். தன் மனதில் உள்ள காதலை மறைத்து விட்டு, நவ்தீப்பை கீர்த்தி சுரேஷ் காதலிக்க வைக்கும் முயற்சியில் இறங்குகிறார் விக்ரம் பிரபு. இதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. விக்ரம் பிரபுவை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஒரு கல்லூரி மாணவராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு பையை எடுத்து தோளுக்கு குறுக்கே ‘சச்சின்’ விஜய் போல போட்டுக் கொண்டால் கல்லூரி மாணவராக மாறிவிட முடியாது. அவருடைய உயரத்திற்கும், தோற்றத்திற்கும் ஆக்ஷன் படங்கள்தான் சரியாக இருக்கும். அதை உணர்ந்து படங்களைத் தேர்ந்தெடுத்தால் விக்ரமுக்கு தொடர்ந்து வெற்றிகள் கிடைக்கும். தமிழ்த் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நாயகியாக இந்தப் படம் வெளிவரும் முன் வரை இருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்தால் அப்படி எதிர்பார்த்தவர்களின் மனதில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்களோ என்றுதான் தோன்றுகிறது. முதல் பாதியில் மேக்கப் இல்லை, ஹேர்ஸ்டைல் சரியில்லை, அவருக்குக் கொடுக்கப்பட்ட ஆடைகள் சரியில்லை என பல இல்லைகள். இடைவேளைக்குப் பின்னர்தான் அவரைக் கொஞ்சம் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். நீரஷ் ஷா ஒளிப்பதிவு செய்த படமா இது என்று ஆச்சரியப்பட வைக்கிறது. படத்தில் நகைச்சுவை என்ற எதுவுமே இல்லை. ரேடியோக்களிலேயே நம்மைப் பேசிப் பேசிக் கொலை செய்த அஜய், பாலாஜி, பாலாஜி என மூன்று பேரை ஹீரோவின் நண்பர்களாக நடிக்க வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட வாய்ப்புகளை உண்மையாகவே நகைச்சுவை செய்யத் தெரிந்த நல்ல நடிகர்களுக்குக் கொடுத்திருக்கலாம். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ஒரு பாடலாவது இனிமையாக ஒலிக்க வேண்டுமே. மற்ற படங்களில் நடிக்கும் ஆசையில் தனக்குத் தொடர்ந்து வாய்ப்புகளைத் தரும் இயக்குனர் விஜய்யை நன்றாகவே ஏமாற்றியிருக்கிறார். அம்பிகா, நாசர் என மற்ற நடிகர்களையும் வீணடித்திருக்கிறார்கள். தலைப்பில் வைத்த கவித்துவத்தை, எடுத்துக் கொண்ட கதையில் உள்ள காதலை, படம் முழுவதும் நிறைவாகக் காட்டியிருக்கலாம். தன்னுடைய முந்தைய படங்களோடு ஒப்பிடும் போது விஜய்க்கு இந்தப் படம் மறக்க வேண்டிய படமாகவே இருக்கும். இது என்ன மாயம் - மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. - கவி

Tags: ithu enna mayam

Share via: