ஆவி குமார் - விமர்சனம்
26 Jul 2015
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயமுறுத்தும் பேய் படங்களே வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தின் பெயரில் மட்டும்தான் ஆவி இருக்கிறதே தவிர பயமுறுத்தும் எந்த ஆவியும் படத்தில் இல்லை, மாறாக ஒரு அழகான ஆத்மா தான் உலாவிக் கொண்டிருக்கிறது. எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறோம், ஆனால், இப்படி ஒரு காதல் கதை வந்ததில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். அறிமுக இயக்குனர் காண்டீபன் எடுத்துக் கொண்ட கதையிலிருந்து சிறிதும் விலகாமல் சொல்ல வந்ததை தெளிவாகவே சொல்லியிருக்கிறார். ஆவிகளுடன் பேசும் சக்தி கொண்ட உதயா தமிழ்நாட்டில் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர். ஆனால், திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அவருக்கு அவர் செய்யும் நிகழ்ச்சியை காரணமாக வைத்து யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். இதனால் கடைசி கடைசி நிகழ்ச்சியாக மலேசியாவிற்கு சென்று விட்டு அத்துடன் ஆவிகளுடன் பேசுவதை நிறுத்திவிட முடிவு செய்கிறார். மலேசியாவிற்கு சென்று நிகழ்ச்சி நடத்துபவருக்கு காவல் துறை அதிகாரி நாசர் மூலம் ஒரு சவாலை சந்திக்க வேண்டி வருகிறது. அதே சமயம், அவர் தங்கும் வீட்டில் இருக்கும் ஒரு ஆவியையும் சந்திக்கிறார். போகப் போக அந்த ஆவியைக் காதலிக்கவும் ஆரம்பிக்கிறார். ஆனால், அது ஆவி அல்ல, ஒரு ஆத்மா என்று அவருக்குத் தெரிய வருகிறது. நாசருடனான சவாலுக்கும், இந்த ஆத்மாவிற்கும் ஒரு தொடர்பு உண்டு, அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ஆவிகளுடன் பேசும் ஆவி குமாராக உதயா. ஆரம்பக் காட்சியிலேயே அவர் ஆவியுடன் பேசுவதை நம்பகத் தன்மையுடன் காட்டிவிடுகிறார்கள். அடுத்து அவர் மலேசியாவில் நிகழ்ச்சி நடத்தும் போதும், நாயகி கனிகா திவாரியின் ஆத்மாவைச் சந்திக்கும் போதும் அது அனைத்துமே படத்துடன் ஒன்றிப் போக வைத்துவிடுகிறது. இம்மாதிரியான வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் உதயா இன்னும் உயரத்திற்குப் போகலாம். அழகான ஆத்மாவாக கனிகா திவாரி. இப்போதுள்ள முன்னணி ஹீரோயின்களுக்கும் சவால் விடும் அழகு. அவருடைய சிரிப்புக்கும், குறும்புத்தனமான பார்வைக்கும் விழாமல் இருக்க முடியாது. எங்கே கடைசி வரை ஆத்மாவாகவே அவரை அலைய விட்டு விடுவார்களோ என்று எதிர்பார்த்தால் இயக்குனர் நம்மை ஏமாற்றவில்லை. கனிகா திவாரியை தமிழ்த் திரையுலகம் வாரிக் கொள்ளும் என்தில் சந்தேகமில்லை. ஜெகன் எப்போதுதான் கத்துவதை நிறுத்தப் போகிறாரோ எனத் தெரியவில்லை. ஆத்மாவாக வரும் கனிகா கூட அமைதியாகத்தான் பேசுகிறார், ஆனால், ஜெகன்தான் பேய்க் கூச்சல் போடுகிறார். எந்த விமர்சனத்தையும் படிக்க மாட்டார் போலிருக்கிறது. காவல் துறை அதிகாரியாக நாசர், உதயாவின் மாமாவாக எம்எஸ் பாஸ்கர் கொஞ்சமாக வந்தாலும் நிறைவு. கிளைமாக்சுக்கு முன்னதாக வரும் முனீஷ்ராஜ், தேவதர்ஷினி கூட்டணியின் நகைச்சுவையில் கொஞ்சம் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும், சிரிக்க முடிகிறது. விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் தேவா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ராஜேஷ் கே.நாராணயனின் ஒளிப்பதிவில் மலேசியா காட்சிகளும், ஹீரோயினும் தனி கவனத்துடன் படமாக்கப்பட்டிருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சிகளில் நட்சத்திரங்களின் பின்னால் கேமராகவும் அவ்வளவு ஓடியிருக்கிறது. கடினமான காட்சிகளை குழப்பமில்லாமல் படமாக்கியிருக்கிறார்கள். ‘ஆவி குமார்’ - கண்டிப்பாகக் கொட்டாவி வராமல் பார்க்கலாம்…