maari-review

19 Jul 2015

தமிழ்த் திரையுலகில் அதிர்ஷடத்தையும் மீறி தங்களது சொந்தத் திறமையால் முன்னேறிய ஒரு சில நடிகர்களில் தனுஷும் ஒருவர். அவருடைய அப்பாவும், அண்ணனும் ஒரு இயக்குனராக இருந்தாலும் தனிப்பட்ட திறமை எதுவும் இல்லாமல் இருந்தால் தனுஷும் இந்நேரம் காணாமல் போயிருப்பார். எத்தனை வாரிசு நடிகர்கள் சினிமாவில் ஜெயித்திருக்கிறார்கள். ஆனால், தேசிய விருது வாங்கும் அளவிற்கும், அமிதாப்புடன் இணைந்து நடிக்கும் அளவிற்கும் தனுஷ் வளர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய தனிப்பட்ட திறமைதான் காரணம். ஆனாலும், இயக்குனர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், நல்ல கதைகளைத் தெரிவு செய்வதிலும் தனுஷும் அடிக்கடி தடுமாறித்தான் போகிறார். இது தனுஷின் ரசிகர்களுக்காக மட்டுமே தனியாகத் தயாரான படம் என்றே சொல்லத் தோன்றுகிறது. அப்படியே ஜாலியாக வந்து , ‘செஞ்சிடுவேன்’ என பன்ச் டயலாக் பேசிவிட்டு மட்டுமே போய்விடுகிறார் தனுஷ். காஜல் அகர்வால் போன்ற பெண் கிடைத்தால் காதலிக்கக் கூட மாட்டேன்கிறார். கொஞ்சம் ‘புதுப்பேட்டை’, கொஞ்சம் ‘ஆடுகளம்’ என இரண்டையும் மிக்சியில் போட்டு குலுக்கி, புத்தம் புது கதையாக ரெடி பண்ணிக் கொடுத்திருக்கிறார் பாலாஜி மோகன். ஒரு இரண்டு ரஜினி படம் பார்த்திருந்தாலே ஹீரோயிசமான காட்சிகளை எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் தனுஷ், கலர் கலர் சட்டை, முறுக்கு மீசை, கூலிங் கிளாஸ், கழுத்து நிறைய தங்கச் சங்கிலி, தெனாவட்டான நடை என ‘மாரி’ கதாபாத்திரத்தில் தனி ஸ்டைலைக் கடைபிடித்து அவருடைய ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார். அந்த புகை பிடிக்கும் காட்சியை மட்டும் விட்டு விட்டால் தனுஷை இன்னும் கொஞ்சம் தாராளமாகப் பாராட்டலாம். காஜல் அகர்வால் படத்தின் நாயகி, ஆனால் தனுஷின் ஜோடியில்லை. இப்படி இரண்டு அழகான கண்களை வைத்துக் கொண்டு இருப்பவர்களைப் பார்த்தால் எந்த இளைஞனுமே காதலில் விழுவான். ஆனால், தனுணை அந்த கண்கள் கூட ஈர்க்கவில்லை. அட்லீஸ்ட் கிளைமாக்சிலாவது இருவரும் காதலிப்பார்களா என்று எதிர்பார்த்தால் அங்கும் ஏமாற்றம்தான். தனுஷ் போன்ற நடிகருடன் கிடைத்த வாய்ப்பில் தன்னை எப்படியாவது அடையாளப்படுத்தி விடத் துடிக்கிறார் ரோபோ சங்கர். தலை இருக்கும் போது வாலு அதிகமாகவே வாலாட்டுகிறது. ஓவர் நடிப்பு என்றால் என்ன என்பதை ரோபோ சங்கரைப் பார்த்து புரிந்து கொள்ளலாம். ஆனாலும், தனுஷின் மற்றொரு கரமாக வரும் வினோத் யதார்த்தமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். முயற்சி செய்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் வினோத். பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் பசுத் தோல் போர்த்திய புலி. தனுஷைப் பிடிக்க வந்தவர், கடைசியில் எதற்காக அதையெல்லாம் செய்தார் என்பது எதிர்பாராத ட்விஸ்ட். அந்த கதாபாத்திரத்திற்கு விஜய்யின் முகம் ஒத்துழைத்த அளவிற்கு அவருடைய நடிப்பு ஒத்துழைக்கவில்லை. மைம் கோபி, சண்முகராஜன் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். அனிருத்தின் இசையில் பின்னணி இசை மட்டும் ஓகே. பாடல்களில் சத்தம் ஓவர். கலை இயக்குனர் பல காட்சிகளில் பின்னணியில் பெயின்ட் கூட அடிக்க மறந்துவிட்டார் போலிருக்கிறது. விட்ட குறை தொட்ட குறையாக இருக்கிறது அரங்க அமைப்புகள். ‘மாரி’ - தூறல்...

Share via: