பாகுபலி - விமர்சனம்

10 Jul 2015
ஒரு சுரங்கம் வழியாக ஒரு குழந்தையுடன் தப்பித்து வரும் ரம்யாகிருஷ்ணன், அந்தக் குழந்தையைக் காப்பாற்றிவிட்டு உயிரை விடுவது ஏன் ? அனுஷ்கா அரண்மனைக்கு எதிரே சங்கிலியால் கை, கால்கள் கட்டப்பட்டிருப்பது ஏன்? தமன்னாவும் சிலரும் அனுஷ்காவை மீட்க மறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது ஏன் ? ரானா கொடுங்கோல் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பது ஏன் ? உள்ளுக்குள் வன்மமும், வெளியில் ராஜ அடிமையாகவும் சத்யராஜ் இருப்பது ஏன் ? அப்பா பிரபாஸை சத்யராஜே குத்திக் கொல்வது ஏன் ? கை, கால்கள் கட்டப்பட்ட அனுஷ்காவைப் பார்த்ததும் மகன் பிரபாஸ் கொதித்துப் போவது ஏன் ?.... இப்படி பல ஏன்கள் ? இந்த ‘பாகுபலி’ – தி பிகினிங்’ படத்தில் …..இதற்கான விடைகளை ‘பாகுபலி’ – தி கன்குலுஷன்’-ல் தெரிந்து கொள்ளுங்கள் என படத்தை முடிக்கிறார்கள். விட்ட குறை தொட்ட குறையாக தியேட்டரை விட்டு எழுந்து வர வேண்டியிருக்கிறது. ஆனாலும், அந்த இரண்டரை மணி நேரத்தில் காடு, மலை, குகை, பனி மலை, போர்க்களம், அரண்மனை, நீர் வீழ்ச்சி என இரண்டு கண்களால் பார்க்க முடியாத அளவிற்கு பரந்து விரிந்த பிரம்மாண்டமான ஒரு படைப்பாக இந்த ‘பாகுபலி’யைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. ஒரு திரைக்குள் இந்தப் படத்தின் காட்சிகளை அடக்கி விட முடியாது போலிருக்கிறது. பக்கத்திலேயே இன்னொரு திரை வைத்து காட்டினால்தான் அந்த பிரம்மாண்டத்தை ரசிக்க முடியும் என ராஜமௌலியின் கற்பனையையும் மீறி நமது கற்பனைகளும் சிறகடித்துப் பறக்கிறது. நம்பவே முடியாத பல காட்சிகளை ஆச்சரியப்படும் விதத்தில்  கற்பனைக்கும் கற்பனை சேர்க்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார்கள். ராஜமௌலியை மட்டும் தனித்துப் பாராட்டாமல் அவருக்கு தோள் கொடுத்துள்ள ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், படத் தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஸ்வர்ராவ், விஎப்எக்ஸ் ஸ்ரீனிவாஸ் மோகன், இசையமைத்துள்ள மரகதமணி, சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள பீட்டர் ஹெய்ன், வசனம் எழுதியுள்ள மதன் கார்க்கி, அரங்கங்களை அமைத்துள்ள தோட்டாதரணி என இந்தப் படத்திற்காக உழைத்துள்ள கடைசி அசிஸ்டென்ட் வரை பாராட்டித்தான் ஆக வேண்டும். ஏன் டீ கொடுத்தவரைக் கூடப் பாராட்டினால் தப்பில்லை. கதை என்று பெரிதாக சொல்ல முடியாவிட்டாலும், நாம் தமிழில் ஏற்கெனவே பார்த்து ரசித்த பல எம்ஜிஆர், சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் நடித்த பல தமிழ்ப் படங்களைப் போலத்தான் உள்ளது. அதை இந்தக் காலத்திற்கேற்ற வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். இதையே மிரண்டு போய் பார்க்கும் நாம், அப்போது விஎப்எக்ஸ் போன்ற உதவிகள் எதுவும் இல்லாத காலத்தில் பல பிரம்மாண்டமான சரித்திரப் படைப்புகளைக் கொடுத்த இயக்குனர்களை ராஜமௌலிக்கெல்லாம் ராஜா என்று இப்போது பாராட்டியே ஆக வேண்டும். பிரபாஸின் பலத்தை படத்தின் ஆரம்பத்திலேயே காட்டிவிடுகிறார்கள். அதற்கான நம்பகத் தன்மையையும் உருவாக்கி விடுகிறார்கள். ஆறடி உயர ஆஜானுபாகுவான தோற்றத்தில் அவர் சிவன் சிலையைத் தூக்கினாலும், மலையைப் புரட்டினாலும், யானையை வீழ்த்தினாலும் கூட நம்பாமல் இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் தெலுங்கு முகமாகவே நமக்குத் தெரிபவர் போகப் போகப் பழகி விடுகிறார். அந்தப் போர்க்களக் காட்சியைத் தவிர முதல் பாகத்தில் பிரபாஸுக்குப் பெரிய வேலையில்லை. ராணா டகுபதி கொடுங்கோல் ஆட்சி புரியும் மன்னராக நடித்திருக்கிறார். பிரபாஸின் தோற்றத்திற்கும், பலத்திற்கும் ஈடு கொடுக்கக் கூடிய அளவில் இவரும் இருக்கிறார். தன்னால் அரியணை ஏற முடியவில்லை என்ற வெறுப்பைக் காட்டுவதிலும், தன்னைக் கொல்ல வரும் காட்டெருமையிடமிருந்து சத்யராஜ் காப்பாற்றினாலும் அவரிடம் காட்டும் நகைப்புத்தனமாகட்டும் பார்வையிலும் வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறார். மொத்தமாகப் பார்த்தால் இந்த முதல் பாகத்தில் சத்யராஜ்தான் அதிக நேரம் வந்திருப்பாரோ எனத் தோன்றுகிறது. ராணா இருக்கும் காட்சிகளிலும் இருக்கிறார், போர்க்களக் காட்சிகளிலும் இருக்கிறார், பிரபாஸுடனும் இருக்கிறார், ரம்யா கிருஷ்ணனுடனும் இருக்கிறார். சத்யராஜை இந்தக் கதாபாத்திரத்தில் பார்க்கும் போது ‘பொன்னியின் செல்வன்’ பழுவேட்டரையர் தோற்றத்தில் அவ்வளவு பொருத்தமாக இருப்பார் போல இருக்கிறதே என்று தோன்றுகிறது. யாராவது சீக்கிரமாக ‘பொன்னியின் செல்வன்’ஐ படமாக உருவாக்க மாட்டார்களா ? மகன்தான் அரியணை ஏற வேண்டும் என்ற தீவிரமான குணம் கொண்டவராக நாசர். இருந்தாலும் இதே போல கதாபாத்திரத்தில் அவரை ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் பார்த்தது  போன்ற ஒரு உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை. ‘படையப்பா’ படத்திற்கப் பிறகு ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு கம்பீரமான கதாபாத்திரம். அவரின் ராஜநடையும், ராஜதந்திரமும்..அடடா…போட வைக்கிறது. தமன்னாவை இதை விட இதற்கு முன் இவ்வளவு அழகாக யாராவது காட்டியிருப்பார்களா என்று தெரியவில்லை. ‘பாகுபலி’ படத்திற்காக முதன் முதலில் வெளிவந்த அவருடைய புகைப்படத்தையே ரசித்தவர்கள் நாம், படத்தில் ரசிக்காமல் இருப்போமா என்ன ?. அழகு தேவதையாக மட்டும் காட்டாமல் வீர மங்கையாகவும் காட்டியிருக்கிறார்கள். கிடைத்த சந்தர்ப்பத்தில் வீரத்திலும், காதலிலும் கருணையில்லாமல் நடித்திருக்கிறார். ‘தேவ சேனா’ அனுஷ்கா, இரண்டரை மணி நேரப் படத்தில் இரண்டே இரண்டு நிமிடம்தான் பேசியிருப்பார். ஒருவேளை இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா ஆளப் போகிறாரோ என்னமோ தெரியவில்லை… கதாபாத்திரங்களும், காட்சியமைப்புகளும் நம்மை ரசிக்க வைத்தாலும் இரண்டரை மணி நேரப் படத்தில் என்ன கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார்கள் என்று படம் பார்த்து விட்டு வந்தால் மிஞ்சுவது ஏமாற்றமே. அழுது அடம் பிடிக்கும் குழந்தையிடம், அங்கே பார், இங்கே பார் என சமாதானம் சொல்வது போலவே முழுப்படமும் உள்ளது. ஒரு வேளை இரண்டாவது பாகத்தில் மொத்தமாக சொல்லிவிடலாம் என ராஜமௌலி நினைத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஆனாலும், கதை இல்லாமல் காட்சிகளின் பிரம்மாண்டத்தால் மட்டுமே ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

Tags: baahubali

Share via: